புரியவில்லை!
என்ன எழுதுவது?
எதையெல்லாம் சகித்துக்கொண்டு,
மற்ற எதையெல்லாம் பகிர்ந்து கொள்வது என்பதும் தெரியவில்லை!
மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையை விட இந்திய கடற்பகுதியில் ஊடுருவிய சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்! இதைப்பற்றி கேள்வி கேட்ட இந்தியனுக்கு கொடுக்கப்பட்ட பதில், கடினமான சட்டத்தில் கைது!
இதை எப்படி சகித்துக்கொள்வது!
அவன் என்னைப் போல அல்லது என்னைவிட அதிகம் கோபப்பட்டவன்!
அவனை கைது செய்து, அவன் கருத்துக்களையும் அல்லவா பூட்டிவிட்டார்கள்!
வெட்கமில்லாமல், இனி என்ன எழுதுவது?
அவன் என்னை மாதிரி தமிழன்!
அவன் என் சாதி,
என் மதம்,
என் இனம்!!
ஹி ஹி நம் இனம்!!!!
________________________________________
ஒரு நாவல் எழுத தேவைப்படும் நாட்களை விட அப்படி ஒரு கதையை உருவாக்கி, அதை காட்சிகளாக்குவதற்க்கு நாட்கள் மட்டுமல்ல் திறனும் அதிகம் தேவை. ஒரு கதையை படித்து அசைப்போட்டு, சிந்தித்து விமர்சனம் செய்ய தேவைப்படும் அவகாசத்தை விட ஒரு சினிமாவைப்பற்றி விமர்சனம் செய்ய கால அவகாசம் தேவை! ஆனால் காலையில் ஒரு சினிமா, மாலையில் ஒரு சினிமா பார்த்துவிட்டு, இரண்டுக்கும் சேர்த்து ஒரே நாளில் விமர்சனம் எழுதும் உண்மைத்தன்ம் இல்லாத மனிதர்கள்.
_______________________________________________________________
ஒரு சோப்புக்கு இலவசமாய் கொடுக்கப்படும் நோட்டு புத்தகத்தால் முதல் மார்க்கு எடுக்க முடியுமா? கேனத்தனமாய் ஒரு தொலைக்காட்சி விளம்பரம்!
_______________________________________________________________
சிகப்பழகு, அதாவது சிகப்புநிறத்தில்தான் பெண்கள் அழகாம்! எதனோடு அந்த சிகப்பை ஒப்பிடுகிறார்கள்? பெரும்பான்மை இந்தியர்களின் நிறமான மாநிறத்தோடும் கருப்போடும் ஒப்பிடுகிறார்கள்! கொந்தளிக்கவேண்டாமா? சிகப்பே அழகென்று இன்றுவரை தொடரும் விளமபர மற்றும் நுகர்வோர் முட்டாள்த்தனம்!
_____________________________________________________________________
தாய்மொழி தமிழாக இல்லாதவர்கள் தமிழ் சினிமா இசையை ஆள்கிறார்கள் என்பதாய் படுகிறது! உடலை முடிந்த அளவு திறந்துகாட்டும் பண்பாட்டை சேர்ந்த பெண்ணினம் தமிழ் சினிமா, விளம்பரம், பண்ணாட்டு அலுவலக வேலைவாய்ப்புகள் இன்னும் ஏராளமான துறைகளில் அதுவும் தமிழ்நாட்டில்.......! தமிழ் செம்மொழியாய் இருந்தால் என்ன கத்திரிப்பூ கலர் மொழியாக இருந்தால் என்ன?
______________________________________________________
தமிழின் சிறப்புகளில் மிக முக்கியமானதும், தமிழின் சிறப்பை தெளிவாக எடுத்துக்காட்டுவதும் நம் பண்டைய பக்தி இலக்கியங்களாகும்! திராவிட அரசியல் ஆதிக்கத்தில் பகுத்தறிவும் வளரவில்லை, தமிழ் மட்டுமல்ல தமிழனும் வளரவில்லை! ஆங்கிலம் சரியாக பேசத்தெரியவில்லையே என்றூ வருத்தப்படுபவர்கள் தாய்மொழியாம் தமிழை தவறாக பேசிக்கொண்டிருப்பதை அறிந்தவர்களாகவே உள்ளனர்! தந்தை பெரியாரின் உண்மையான பகுத்தறிவு கருத்துக்கள் தமிழர்களை சென்றடையாமல் கவனமாய் பார்த்துக்கொண்டவர்கள், இரண்டு பக்கத்திலுமே உள்ளார்கள்!
__________________________________________________________
குரானும் பைபிலும் தொடர்ந்து திரும்பத் திருமப் ஓதப்படுவதாலும், இரவும் பகலும் படிக்கப்படுவதாலுமே அவை மறைநூல்தன்மையை அடைந்துள்ளது என்பது என் சொந்தக்கருத்து! அவற்றை அப்படி பின்பற்ற சொன்னவர்கள் அவை சார்ந்த மதத்தலைவர்கள். அதுபோல தமிழில் உலகப்பொதுமறையாம், வாழ்வியல், பொருளாதாரம், மேலாண்மை என எல்லா வழிகாட்டலும் கொண்ட திருக்குறள் அவ்வாறு நம்மால் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா!
சைவ வைனவ பிரிவுகளுக்கு உட்படாத குலதெய்வ பிரார்த்தனை மட்டுமே கொண்ட தமிழர்களே பெரும்பான்மையானவர்! அப்படிப்பட்ட தமிழர்க்கு திருக்குறள்தானே பைபிள், குரான், கிரந்தம் எல்லாமே! அந்த நூல் எல்லா தமிழர்களையும் சென்றடைந்திருக்க வேண்டாமா? பிராமனர்கள் காலையும் மாலையும் சொல்லும் சமசுகிருத மந்திரம் மாதிரி நாமெல்லோரும் நாளுக்கு ஒரு குறளாவது மனனம் செய்யும் வாழ்முறை வழக்கப்பட்டிருக்கவேண்டாமா? இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுக்கும் உள்ள நாள் மற்றும் வார வழிபாடுகளில் பாடப்படும் புனித பாடல்களைப் போல் திருக்குறள் நமக்கு பழக்கப்பட்டிருக்கவேண்டாமா?
___________________________________________________
ஊனப்பட்ட தமிழ்த் தலைமுறை எதை எதையோ பின்பற்றி வருகிறது! தமிழ் இன்னும் பல்லாயிரம் வருடங்கள் வேரோடிருக்கும், தமிழன், தமிழனாய் இருப்பானா? குறைந்தபட்சம் மனிதனாகவாவது இருப்பானா? இலங்கையில் சகதமிழன் கொல்லப்பட்ட போதும் பார்த்து ரசிக்கிறான்! ராமேஸ்வரம் நாகையில் கொல்லப்படும்போதும் கிரிக்கெட் ஸ்கோரைத்தான் கேட்டு தெரிந்துகொள்கிறான்.
________________________________________________________
இராமாயண கதையில் மரவுரி தரித்து காட்டுவாசி போல் காட்டில் அலைந்தவர்கள் இராமன், அவன் மனைவி, அவன் தம்பி! அதே சமயம் நாகரீகமான உடை, ஆபரணம், நன்கு சமைக்கப்பட்ட உணவு என்று வாழ்ந்தவன் என்று வர்ணிக்கப்பட்டவன் இராவணன்! ஆனால் அந்த கதையை தழுவி ஒரு பன்னாடை படம் எடுக்கிறது, அதுவும் எப்படி? காட்டுவாசி போல் ராவணன்! மீசையில்லாத ஒரு வகையறாவின் பிரதிநிதி போல இராமன்! நல்லவேளை படம் ஊத்திகிச்சு! வடக்கே முழுமையாக, தெற்கே அதிசுத்தமாக! இனி தயாரிப்பாளர்கள் அந்த ஜந்துவை நெருங்க பயப்படுவார்கள்! படட்டும்!!
_______________________________________________________________
இராமாயணம் பற்றி அதிகம் யோசித்ததில் பட்டது!
அந்நாளில் சைவ வைணவ சண்டை அதிகமாக இருந்திருக்கிறது. அதை செய்தவர்கள் உழைப்பால் இந்திய மற்றும் தமிழ் நாகரீகத்தை வளர்த்தவர்கள் அல்லர். அந்த பாவச்செயலை செய்தவர்கள், உழைப்பே இல்லாமல் அடுத்தவன் முதுகில் சவாரி செய்துகொண்டு மூடநம்பிக்கை, சாதிப்பிரிவு வளர்த்த வகையறாக்கள். அந்த சண்டையில் தங்களை பலப்படுத்திக்கொள்ள பல கப்சாக்களை அருளியுள்ளனர். அதில் ஒன்றே இந்த ராமாயணம்! ராமாயணம் ஒருவரிச் சுருக்கம் என்ன? வைணவ இராமன் சைவ இராவணனை அழித்தான்! அதன் விளக்கம் என்ன? 60,000 பெண்டாட்டி வைத்திருந்தாலும் வைனவ தசரதனின் புத்திரசோக மரணமே பிரதானம்! அப்படிப்பட்டவன் சரியானவன்! ஆனால் நல்ல அரசன், நல்ல சகோதரன், கலைகளில் வல்லவன், ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவன் இராவணன் - அவன் சிவனை வணங்கும் சைவ சமயத்தவன்! அதனால் அவன் கெட்டவன்! சின்னக் குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதையை வளர்த்து காவியமாக்கியது சோம்பேறித் திருடர்களின் மதிநுட்பம்! அதை அறிந்த பின்னும் சும்மா இருத்தல் சரியோ தமிழா?
நானும் தமிழன்!
என்ன செய்யவேண்டும்?
எதைப் பேசவேண்டும்?
என்ன பேசக்கூடாது?
ஒன்றுமே புரியவில்லை!
மேலே நான் குறிப்பிட்டது, மிகச் சிறு சிறு விசயங்களே!
இன்னும் எண்ணற்றவை உண்டு!
நல்ல பகடியாக எழுதட்டுமா?
பகடி செய்யும் தருணமா இது?
மெளனம் நல்லதோ?
இயல்வது கரவேல்னு கிழவி திட்டமாட்டாளா?