Tuesday, December 28, 2010

ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை!

”பொய்யாய் பழங்கனவாய்”  என்பது மாதிரி உருட்டி திரட்டி சேர்த்து வைத்ததெல்லாம் சட்டென மறைந்து ஒரு மாயப்பெருவெளி உண்டாகி விட்டது போல் பிரமை!

ஏணையோருக்கு பட்டியலிடுமளவு மறுமொழிகள் மட்டுமே தோன்றுகிறது. உள்ளிட்டபின் அவை அர்த்தமில்லாத மற்றுமொரு வாத வித்துதானென்று தோன்ற ஒரே வீச்சில் அழித்தெறிந்துவிட்டு பக்கம் பக்கமாய் பயணிக்கிறேன். என்ன தேடுகிறேன் என எனக்கே தெரியவில்லை என்பது மாதிரி அலைகிறேன்! ஒவ்வொரு அனுவும் ஓய்ந்துபோய், முதிர்ந்த நகர்வோடு தோளில் மூட்டைகளாய் கட்டிய பிச்சைக்காரன் மாதிரி, சகலமும் உதறிய பரதேசி மாதிரி; ஆனால் பயணம் நிற்கவில்லை, விடமுடியாத பழக்கம் மாதிரி!

இப்படி நிணைக்கையிலேயே என் கரம் நீண்டு என் தாடையை பற்றி நிணைவூட்டுகிறது,  பற்று முழுதும் அழியவில்லையென! இபோது பெற்றது வழக்கம் போல் “இது புளிக்கும்” என்ற ஞானமின்றி வேறில்லை என்பதை புத்தி உணத்துகிறது!

ஆக, கிடைக்காதவற்றை நிணைக்காது விடல் நன்றன்றோ! எண்ணிக்கை முடிகையில் எல்லாமே புளித்த பழம்தான்! அது சரி, “முற்றாது முற்றும் துறக்கமுடியுமா”? உரத்த ஏளனச்சிரிப்பொன்று அடிவயிற்றில் தொடங்கி காதை கிழிக்கிறது! வெளியே படர்ந்துள்ள மௌனமும் செவியில் ரத்தம் வர ஒலிக்கிறது! ஆயினும் என் பெருவெளியில் மௌனம் காற்றாய் வீசுவது நிற்கவில்லை!

முட்டி மோதி, கிழித்து வெளியேறிய பின் மீதமிருப்பது ஓடு, முட்டையல்ல அதில் அடைபட! காற்றோ, மழையோ, பனியோ, வெயிலோ, இங்கே நிறக ஒரு கூரை இல்லை! ஓடி ஒடி, தேடிப் பெற்றது வேண்டாததாகியது போல் ஒரு தோற்றம்!

சும்மா இருப்பதும், மௌனம் பயில்வதும் கலையா, தவமா, தண்டனையா? எல்லாமே வலியில் தொடங்குவதால் பேதம் அறியமுடியவில்லை; கோரமாய் கிழிந்த துணியாய் வெட்கத்தால் மறையவில்லை நிர்வாண பேதை மனது!

கொட்டிய சொற்களையே மீண்டும் வாயில் உழட்டி, மென்று துப்புவது அஃறினையிலும் கீழ்!

மேல், கீழ் இரண்டுமே மனிதன்!
பைத்தியம், சாமியார் இரண்டுமே  தீர்வுதான்!
அடடா, அடடா, மிகச்சரியாய் எதுவும் புரியவில்லை!
தீயென்று நினைக்கையிலேயே விரல் சுடும் நிலைக்கு கனவென்றும், பிரமையென்றும், பொய்யென்றும் காணப்பெறுகையில் கடந்து வந்த எல்லாமே “பொய்யாய் பழங்கனவாய்” போன பின் ஆவதென்ன?

0 comments: