இன்று 28.11.2009 அன்று தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழகத் தலைநகரில் நடைபெறுகிறது. கலைமாமணி விருதுக்கும் அதறகு மேலும் திறனும் தகுதியும் நிரம்பிய மூன்று பேர் எனக்கு மிகவும் பரிச்சயம், அவர்களிடம் பணி புரிந்திருக்கிறேன் என்கிற தகவலை மகிழ்வோடும் சிறிது கர்வத்தோடும் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களோடும் வணக்கங்களோடும் என் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!
![]()
திரு. ரமேஷ் பிரபா, சன் டிவி தொடங்கிய முதல் நாளில் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர். சராசரியான கிராமத்து தமிழனுக்கும் தொலைக்காட்சியில் பங்கெடுக்கும் வாய்ப்புத் தருகிற, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ந்து பலவருடங்கள் சாதணை புரிந்து வரும் ”பாட்டுக்கு பாட்டு” தொடங்கி இன்றைய “சந்தித்த வேளையில்” நிகழ்ச்சி வரைக்கும் வெற்றிகரமான சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர்!!
குங்குமம், தினகரன் உட்பட பற்பல சுவாரஸ்யமான டிவி விளம்பரங்களை உருவாக்கியவர். தமிழகத்தின் மிகவும் வெற்றிகரமான் விளம்பர நிறுவணங்களில் ஒன்றான ”கேலக்ஸி”யை உருவாக்கியவர். பிற்பகுதி 80களில் விகடன் பத்திரிக்கையில் இவர் எழுதிய வியாபார நுட்ப கட்டுரைகளே இன்று தமிழில் பல ஃபிஸினஸ் பத்திரிக்கைகள் கொடிகட்டி பறப்பதற்கு முன்னோடி! இன்று ஒவ்வொரு மாதமும் பல கல்வி நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களை சந்திக்கும் கல்வியாளர். . கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பல வெற்றிகரமான புத்தகங்களை எழுதியவர் எனும் பண்முகத்தன்மை வாய்ந்த இவரிடம், இவரின் கேலக்ஸி நிறுவனத்தில் 1998ல் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால்தான் எனக்கு சென்னை வர முடிந்தது.
அன்று தொடங்கி நான் திரு. ரமேஷ் பிரபா அவர்களிடம் கவணித்து வருவது அவருடைய பரந்த வாசிப்பு இயல்பு, ஆழமான தமிழுணர்வு, தான் IIMல் MBA படித்ததை எந்த சூழலிலும் பிரஸ்தபிக்காமல் எல்லா மேடைகளிலும் தமிழர்களிடம் வயது பேதமின்றி தமிழில் பேசும் ஆர்வம். தேவைப்படும்போது மட்டும் மிளிரும் ஆங்கில மொழியறிவு, அபாரமான நிர்வாக ஆற்றல், எல்லோரையும் மரியாதையாக நடத்துவது, எந்த கடிணமான சூழலிலும் முகத்தில் புன்னகை, செயலில் பொறுமை காட்டுவது. அவர் கருத்தோடு முரண்பட்ட என் கருத்துக்களையும் பொறுமையாக கேட்பது, அதற்கு எனக்கு விளக்கமளிப்பது என அவரைக் குறித்த என் ஆச்சர்யங்கள் முற்று பெறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!
இன்று வரைக்கும் கேலக்ஸியின் பல முக்கியமான தயாரிப்புகளில் எனக்கு / என் F1 ஸ்டுடியோஸுக்கு வேலைகள் கொடுத்து வரும் அவருடைய முன்னாள் ஊழியன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனால் தொடக்கம் முதல் எல்லா சந்தர்ப்பங்களிலும், பல பெரிய சபைகளிலும், சமூகத்தின் பல பெரியவர்களிடத்தும் அவர் என்னை அறிமுகப்படுத்தும் சொல் “ இவர் தங்கமணி பிரபு, நம்ம நண்பர்!”
திரு. பாஸ்கர் சக்தி, சிறுகதை எழுத்தாளராகவும் நிருபராகவும் விகடனின் அவருடைய பல சுவாரஸ்யமான படைப்புகளில் தன் எளிமையான தனித்தன்மையால் பல பெரிய தலைகளின் புருவங்களை வில்லாக வளைத்தவர். இவருடைய ”ஒரு நாள் ஒரு இடம்” என்கிற சென்னை நகரின் முக்கியப்பகுதிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் செய்த ரிப்போர்டிங், கடந்த பல வருடங்களாய் எல்லா பத்திரிக்கையாலும் பின்பற்றப்படுகிறது. இவருடைய “ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்” தொடரில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய யதார்த்த கிராமத்து மணிதர்கள் தமிழ் எழுத்துலகுக்கு மிகவும் புதியவர்கள். நான் காதலாகிப்போய் விகடனுக்குள் தொலைபேசியில் இவரை தேடிப் பிடிக்க, லைனில் வந்தவர் “ஓ நீங்கதானா அந்த “சன் டிவி நம்ம நேரம்” இயக்குனர், ரொம்ப நல்லாயிருக்குங்க!” என எனக்கு பாராட்டை பதிவு செய்து ஆச்சர்யம் கொடுத்தார்.
அவள் விகடனில் இவர் “காற்று வளையம்” தொடரில் சொன்ன அழகான காதல் புதிது! சக மணிதர்களை, தம் எண்ணங்களை, தம் உணர்வுகளை மதிப்பீடு செய்து செயல்படும் அந்த காதலர்கள் தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதியவர்கள், அது வெற்றிகரமான நகரத்து கதை, பல பெண் வாசகிகள் “பாஸ்கர் சக்தி என்பது ஒரு பெண் எழுத்தாளரின் புனைப்பெயர் என்றே நம்பினார்கள்! . நகரமயமாதலால் கிராமங்கள் ரியல் எஸ்டேட் கட்டங்களுக்கு மாறுவதை பதிவு செய்யும் இவரின் சிறுகதைகள் நகரத்தவர்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை தூக்கலான இவருடைய ”அழகர்சாமியின் குதிரை”, கிராமங்களில் தொலந்துபோய்விட்ட சாமியாடிகளின் வாரிசுகளை, செல்லாக்காசாகிப்போன உள்ளூர் குறி சொல்பவர்களின் சோகத்தை மிக அற்புதமாக பதிவு செய்திருந்தது! அங்கு தொடங்கி “மெட்டி ஒலி” ”கோலங்கள்” ”மேகலா” மற்றும் சில தொலக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக தன் வாமன பாதங்களில் அடி எடுத்து வைத்தவர்; ”எம்டன் மகன்” தொடங்கி ”வெண்ணிலா கபடிக்குழு” என்று திரைப்பட வசன சாதணைகள் இன்னும் வரப்பாகும் சில திரைப்படங்களுக்கு வசனம், பிரசுரமாகியிருக்கும் பிரபலமான கதைதொகுப்புகள் என்று உயரங்கள் தொடுவதே தன் இயல்பென தொடர்ந்தாலும், நான் முதல் நாள் பார்த்த தொனியில் இம்மியும் மாறாதவர்.
எனக்கு கோலங்கள் தொடரில் நடிக்கும் வாய்ப்புக்காக இயக்குனர் திரு. திருச்செல்வத்திடம் அறிமுகம் செய்துவைத்தவர். பிற்பாடு நான் சிலகாலம் கோலங்கள் தொடரின் அசோசியேட் இயக்குனனாக வேலை பார்த்த போது இவரின் வசனங்களில் வரும் ஆங்கிலப் பிரயோகங்களைப் பார்த்து இவரிடம் என் ஆச்சர்யங்களை சொன்ன போதுதான், தான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்த விவரத்தையே சொன்னார். அது தவிர சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவரும் கூட! இவர் அதீதமாக கோவப்பட்டோ, வருத்தப்பட்டோ, ஆச்சர்யப்பட்டோ நான் பார்த்தேனில்லை! அனால், யாழ்பாணம், கிளிநொச்சியில் தொடங்கி முல்லைத்தீவு வரை நம் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவர் முகம் கடுமையாக வாடியிருந்ததை கண்டேன்.
இவர் குறித்த என்னுடைய படுபயங்கரமான ஆச்சர்யமே இவருடைய எளிமைதான். அவர் சொந்த ஊரான தேனி மாவட்டத்து வடப்புதுப்பட்டியில் எவ்வளவு சாவகாசமாக இருப்பாரோ அப்படித்தான் இந்த சந்தடி மிகுந்த சென்னையிலும் இருக்கிறார். எப்போதாவது இவரோடு பேசிக்கொண்டு நடக்கையில், சென்னை எம்ஜிஆர் நகர் கூட எனக்கு கிராமம் மாதிரியாக படும். இவருக்கான ஒரு பாராட்டு விழாவில் பல்வேறு எழுத்தாளர்கள் பேசும் போதுதான் “பாஸ்கர் சக்தி என்கிற ஒரு எழுத்தாளனின் படைப்புலக விஸ்தீரணம் என்க்கு அறிமுகமானது. மிரண்டு போவதற்கான வாய்ப்பை அவர் எனக்கு கொடுக்காமல் வழக்கம் போல் “அப்புறம் என்ன பிரபு, சாயங்காலம் வெளிய போவமா? ஃப்ரியா இருந்தா வாங்க தலைவா” என்று அவர் உயரத்துக்கு என்னை இழுத்துக்கொள்வார்.
திரு. திருச்செல்வம், மெட்டி ஒலி தொடரில் இணை இயக்குனர் என்பதை விட சந்தோஷ் என்கிற புதுவிதமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் என்பதே இவரின் பொது ஜன அறிமுகம்.
ஆனால், அதற்கு முன்பு திரைப்படக்கல்லூரியில் சவுண்ட் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு தயாரிப்பாளர் திரு.பாலாஜியின் சுஜாதா ரெகார்டிங் தியேட்டரில் வேலை பார்த்தவர். பிறகு பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டரில் இசைஞானி இளையாராஜாவின் ஆதர்ஷ சவுண்ட் என்ஜினியர்களில் ஒருவராக இருந்தவர் என்பது பலருக்கு தெரியாத செய்தி.
பிறகு “கோலங்கள்” - தனது முதல் படைப்பிலேயே பல சாதனைகள் செய்தவர். 6 வருடத்துக்கும் மேலாய் வெற்றிகரமாக, சுவாரஸ்யமாக, நல்ல ரேட்டிங்கில், பார்வையாளர்க்ளின் 9மணி போதையாக எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கும் தொடர் ”கோலங்கள்”. தென்னிந்தியாவிலேயே அதிகமான நாட்களை கடந்த தொலைக்காட்சித் தொடர்! அற்புதமான திரைக்கதை யுக்தி. யதார்த்த அங்கதம் அல்லது சமூக அக்கறையை அடிநாதமாய் கொண்ட கதாபாத்திரங்கள், திரைக்கதையின் போக்கை அனேகமாக எல்லா திசைகளிலும் வெற்றிகரமாக பயணிக்க செய்தது இவரின் ஸ்பெஷ்ல் டச்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில், லைட்டிங் செய்யும் இடைவெளியில், பலத்த சப்த்ங்களுக்கு இடையே, அருகிலேயே ஒருவர் வளவளவென பேசிக்கொண்டிருந்தாலும் அந்த நொடியில் தனக்கு தோன்றிய வசனத்தையோ, காட்சியையோ டக்கென்று எழுதிவிடுவார். நடிகர்களுக்கு பரிபூரண சுதந்திரம் தந்து தனக்கு வேண்டியதை பெற்றுவிடுவதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
இயக்குனர் திரு. பி. வாசு அவர்களிடம் 2 படங்கள் பணிபுரிந்துவிட்டு, திரு. பாஸ்கர் சக்தி அறிமுகத்தில் இவரிடம் நடிப்பு வாய்ப்பு கேட்டேன். என் தேசிய நாடகப்பள்ளி பட்டறைகள் அனுபவங்களை கேட்டுக் கொண்டார். சில நாட்களிலேயே வாய்ப்பும் கிடைத்தது. நடிக்கும் போது நான் சொல்லும் மாற்றங்களை அல்லது யோசனைகள மறுதலிக்காமல் கேட்பார், அதை செய்ய அனுமதியும் கொடுப்பார். ஒளிபரப்பில் பார்க்கும்போதுதான் நான் செய்த மாற்றங்கள் அவருடைய காட்சியமைப்புக்குள் உட்கார்த்தி வைத்திருப்பார்.
பிற்பாடு அசோசியேட் இயக்குனனாக இவரிடம் 9 மாதங்கள் வேலை பார்த்தேன். ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், ரீரிக்கார்டிங், டிஸ்கஷன் என லொகேஷன் பார்ப்பது வரை எல்லா இடத்துக்கும் போனேன். சாதரணமாக அது நடைமுறையில் இல்லை என்றாலும் எனக்கு அவர் தடை சொல்லவேயில்லை! பைக்கில் இருவருமாகவே சுற்றுவோம், நல்ல அனுபவம்!
இப்போது மீண்டும் 4 வருடங்களுக்கு பிறகு சிறிதுகாலம் என் கதாபாத்திரம் வலம் வந்தது! அதே பழைய இயல்போடுதான் இருக்கிறார், பேசுகிறார், பழகுகிறார். ரேட்டிங், வியாபாரம் என்கிற வலைபின்னல்களுக்கு மத்தியில் “கோலங்கள்” தொடரில் அவர் உருவாக்கிய “தோழர்” கதாபாத்திரம் அவருடைய தமிழுணார்வுக்கு ஒரு சான்று! . 6 வருடத்தில பல நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளார், தொலைக்காட்ட்சி தொடருக்கான சில இலக்கண மாற்றங்கள் உட்பட! மேலும் ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு, இயக்கம், சினிமா நடிப்பு, இயக்கம் என தன் அடுத்த வெற்றிப் பயணத்தை தொடர்கிறார்.
வெவ்வேறு வயது, திறன் மற்றும் அனுபவங்களுடையவர்கள் எனினும் வெற்றிகரமான திரு. ரமேஷ் பிரபா, திரு.பாஸ்கர் சக்தி, திரு. திருச்செல்வம், மூவருக்கும் பொதுவான விஷயங்களாக நான் கருதுவது உழைப்புக்கு அஞ்சாமை, அசராத நகைச்சுவையுணர்வு, மேற்பரப்பில் எப்படியிருந்தாலும் உள்ளே ஒரு அமைதியான நீரோட்டம் மாதிரியான சிந்தனை ஓடுவது என்பதே!
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில், இந்த வருடத்தின் மூன்று கலைமாமணிகள் எனக்கு நல்லா தெரியுமே என்று பெருமையடித்துக்கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்!!
| | |