- ஒளி
வருடத்தின் எல்லா நாட்களும் நமக்கு வேலை இருக்கிறது அல்லது ஒருசிலருக்கு சுத்தமாக வேலையில்லை என்கிற வருத்தமிருக்கிறது, அதனால் சும்மாயிருக்கிறார்கள் அல்லது அறிக்கை விடுகிறார்கள். வேலை தேடுவதில் நேரம் போய்விடுகிறது அல்லது ஓய்வெடுக்கவேண்டியுள்ளது! எல்லாருமா கதை வசனம் எழுதமுடியும்? . இதில் உறவுகள் சூழ இனிப்பு பலகாரங்கள், பட்டாசு வாண்வேடிக்கைகள், சிறப்புதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை உள்ளடங்கிய பண்டிகை நாட்கள் என்பவை வாழ்கை அல்லது நம்மை சார்ந்த மணிதர்கள் குறித்த நம்பிக்கைகளை அதிகப்படுத்துகிறது. தீபாவளி சிறப்பு மலர்கள் மாதிரி ஒரு சிலர்க்கு மட்டும் தீபாவளி சிறப்பு இலங்கை சுற்றுப்பயணம் அமைகிறது. திரும்பி வந்ததும் குருப் போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுக்கிறார்கள். அனேகமாக தீவாளிக்கு டிவியில் சுற்றுலா பேட்டியை உருக்கமாக கொடுப்பார்கள். ஆஸ்கார் வாங்க வேண்டியவங்களை அரசியலில் விட்டுவிட்டு எங்கெங்கோ தேடுகிறாய் ஞானத்தங்கமே!!
பிழைப்பு தேடுபவனுக்கு சொந்தங்கள் என்பவையெல்லாம் பொய் என்கிற ஞானத்தை நகரம் தவறாமல் உண்டாக்குகிறது. ஆகவே வருத்திக்கொண்டாவது பஸ்ஸிலும் ரயிலிலும் அடித்து பிடித்து சொந்த ஊர் போகவேண்டிய பண்டிகைகள் தேவைதான் என்று படுகிறது. லீவு போட்டுவிட்டு போனவன் அல்லது ஊரிலேயே இருப்பவன் ஜாதக பலனுக்கு தக்கவாறு மத்தாப்பு புகைந்து வயிறெரிந்து ஜெலுசில் சாப்பிடுவான். ஊரில் இப்படியெல்லாம் பொழுது போகும் என்றாலும் ஒரு சமூகத்தில் தேசியப்பண்டிகைகள் பற்றிய குழு மனப்பான்மை என்பது அடுத்த தலைமுறைக்கு வாழ்கையின் மேலான நம்பிக்கை குறித்த இந்த தலைமுறையின் விளம்பரயுக்தி! அதை பிள்ளைகள் ஒருபடி மேலே போய் யோசிப்பதால் பல பள்ளிக்கூடங்களில் மறுநாள் தீவாளி டிரஸ் அனுமதி இல்லை! அதனால் பையில் வைத்து கொண்டுபோயோ அல்லது வார்த்தையாகவே சொல்லித்தான் தத்தம் ஆட்களை ஆஸ் பண்ணவேண்டியுள்ளது!!
சமகாலத்தியவர்க்கு டாஸ்மாக் 2-3 மணி நேரத்திற்கு ஏற்படுத்தும் தன்னிலை மறந்த போதை மாதிரி, பண்டிகைகள் பால் பேதமின்றி ஒரு மாத போதை! மப்பு இறங்கியதும் மறுநாள் சிலர் தெளிவாக தங்கள் வேலையை பார்க்கிறார்கள். பலர் ஹேங் ஓவரில் தலைவலி, தலைசுற்று என மேலும் சில நாட்கள் மூக்கில் எலுமிச்சம் பழம் வைத்துக்கொண்டு வாந்தியெடுக்க தோதாக சாலையோரங்களிலேயே நடக்கிறார்கள்! ஆனால் அணைவருமே மதங்களை மறந்து ந்யுஇய்ர் அல்லது பொங்கலுக்கு தயாராகத் தொடங்குகிறார்கள். பட்டாசின் வெடிச்சத்தம் மற்றும் ஒலி குறித்த அப்பட்டமான ஹேங் ஓவர்தான் கார்த்திகை தீபத்துக்கு வெடியை மிச்சப்படுத்துவது. மறந்தாலும் கவலையில்லை, இப்பல்லாம் கார்த்திகை தீபத்துக்கும் கடை திறந்திருக்கிறது.
2. ஒலி
இப்போதுள்ள பண்டிகைகள் எத்தனை வருடம் நமக்கு பாரம்பரியமானது, எவ்வளாவு தூரம் நம் பண்பாட்டை ஒட்டி வருவது என்பது குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது வெறும் அடிப்படை மணித இயல்பு என்பதை தாண்டி எந்தவிதமான தீவிரவாத சிந்தனையும் கிடையாது!
நரகாசூரன் எந்த இனத்தின் குறியீடு? வால் அறுந்து மணிதனான பின் எந்த கண்டத்திலும் மணித இனம் மேற்கொண்டு பரினாம வளர்ச்சி அடையவில்லை என ஆய்வுகள் திட்டமாக சொல்வதால், அரக்கர் இனம் இப்போதும் உள்ளதுதானே? அல்லது ஜுராசிக் பார்க் டைனாசர்கள் எல்லாம் சுருங்கி ஓனான்களாக உயிர் வாழ்வது மாதிரி அம்மாம் பெரிய அரக்கர்கள் சைஸ் குறைந்து எங்காவது இந்தியாவுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்! அத்தனை வீரமாக இருந்தவர்கள் வீரியமாக எத்தனை பெத்திருப்பார்கள்!!புராணங்களின்ப்படி பார்த்தால் அந்த வாரிசுகள் நம்ம ஊருக்குள் இருப்பதற்கு சான்ஸ் அதிகம்! வர்ணனைப்படி சிந்தித்தால் கண்ணாடி பார்க்கையில் எல்லோருக்குமே சந்தேகமும் ஞாபகமும் வரவேண்டும். உன்னைப்போல் ஒருவனில் ஞாபக மறதி தேசியவியாதி என கமல் சொல்வதை பரம்பர வியாதி என்று நசுருதின்ஷா இந்தியில் சொன்னதால் புரியவில்லை!
துபாய், மஸ்கட் போன்ற அரபு நாடுகளுக்கு வேலைக்கு போனால் எந்த மதத்தவனாக இருப்பினும் ரம்ஜானுக்குதான் விடுமுறை. தொழுகை நேரக்கட்டுப்பாடுகள் யாவருக்கும் உண்டு! அதுமாதிரித்தான் நம்ம ஊரிலும் அறிவிக்கப்படாத கட்டயங்களால் இப்போது உயிர்வாழும் அரக்க வாரிசுகளும் தங்கள் மூதாதையர்களுக்கு திவசம் கொண்டாடமல் தீவாளி கொண்டாடுகிறார்களா? அதை தெரிந்தே செய்கிறார்களா அல்லது தெரியாமல் “ஹேப்பி தீவாளி” என சரவெடி கொளுத்துகிறார்களா? தைமாதம் தமிழ் புதுவருடப்பிறப்பிலோ அல்லது கலைஞர் டிவியில் சித்திரைத் திருநாளிலோ முதல்வர் இது பற்றி விளக்கலாம்!! வாலி & வைரமுத்து நாட் அலவ்டு!!
தங்கள் நாட்டு அரசன் போரில் வென்று குடிமக்களை, பயிரை, சொத்துக்களையெல்லாம் காப்பாற்றிதைப் போற்றி தமிழ் மக்கள் கொண்டாடியதாக பதிவுகள் சொல்வதுண்டு. ஆனால் எதிரி நாட்டரசன் மரணநாளை வருடத்துக்கு ஒருமுறை பெரிய பண்டிகையாக அன்றைய கூத்துக்கலைஞர்கள், அரசவைப் புலவர்கள், கோயிலுக்கு நேர்ந்துவிட்ட தேவரடியார்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் கலைநிகழ்ச்சிகள் செய்து கொண்டாடினார்களா என்பது பற்றி ஏதும் பதிவுகள் இருந்தால் சொல்லுங்கள்? இமையத்தில் கல் எடுத்து வரும் வழியில் அழகான வடநாட்டு ஃபிகர்களை தங்கள் அரன்மனையில் நாட்டியமாட அழைத்து வந்த மன்னர்கள் இருந்தார்களா என்பது கொசுறு டவுட், பதில் அவசியமில்லை!
பாரம்பரியம், பண்பாடு, புண்ணாக்கு ஆகியவற்றை விட்டுவிடலாம்! தீபாவளி கொண்டாடுவது எப்படி? 20 வருடங்களுக்கு முன் சேட்டிலைட் தொலைக்காட்சிகள் பிறக்கும் முன் தீபாவளி எப்படியிருந்தது என்பதை மங்கிய ஞாபகத்தில் தேடுவதைவிட 50 வருஷத்துக்கு முந்தைய தீவாளியை தாத்தா பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்வது உத்தமம்!!. எண்ணெய் தேய்த்து ஓவராயிலிங், அளவற்ற உணவு வகைகளை கப்பிளிங், அப்பன் காச கரியாக்கற ஃபயரிங் தாண்டி தீபாவளிக்கு என்ன மாதிரியான சடங்குகள் செய்யவேண்டும்? பொங்கலின் மூன்று நாட்களுக்கும் அர்த்தம் தெரியும்! தீவாளீ எத்தனை நாள் என்பதாவது செம்மொழித் தமிழனுக்கு தெரியுமா?டாஸ்மாக் வாசலிலேயே கட்டுப்படுத்தவேண்டிய டிரிங்க் அண்ட் டிரைவை சிக்னலுக்கு அடுத்த இருளில் திருடன் மாதிரி பாய்ந்து பிடிக்கும் காவல்துறையின் இன்னொரு கெட்டிக்காரத்தனம் அளவற்ற 5000 டூ 50,000வாலா பட்டாசு வெடிப்பவன் வீட்டில் அதற்கான பில்லு கேட்காமல், லஞ்சப்பணத்தில் ரசாயணம் தடவிக்கொண்டிருப்பது! ஆனா சும்மா சொல்லப்பிடாது, பல மொக்கைக இதுக்கும் மாட்டிக்குதுக! ஏப்பா இதுக்கெல்லாம் ஹர்ஷத்தையும் குட்ரோஷியையுமா டியுஷன் எடுக்க சொல்லமுடியும்!!
3. வலி!
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவில் அதிகமான சதவிகிதத்தில் இருக்கும் ஏழைகள் தங்கள் வாழ்நாளில் ஒரு தீவாளிக்காவது பட்டாசு வெடிக்கவும் புத்தாடை அணியவும் முடிகிறதா?
இந்த வருடம் கண்டிப்பாக பிச்சைக்காரர்கள் உட்பட அணைத்து தமிழர்களும் தீவாளியோ தீவாளி என்று கொண்டாடியே ஆகவேண்டும்! காரணம் இந்த வருடத்தின் மிகப்பெரிய அளவில் பட்டாசு விற்பனை செய்துள்ள நாடு இந்தியா!!!. அதை வாங்கிய வாடிக்கையாளர் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா? நல்ல தரமான பட்டாசுகள் அவை, நவீன லேசர் வகையாறாக்கள்! மீதமுள்ள வேங்கைகள் கர்ப்பத்தோடும் கோவத்தோடும் அலையும் வண்ணிக் காடுகளில் இன்னமும் அந்தப்பட்டசுகளின் புகை வாசம் கரிந்த மணிதச்சதை நாற்றத்தோடு வீசிக்கொண்டுதான் உள்ளது!!
--இயற்கை விதி--
எரிந்துப்போய் சாம்பலாவதும்
எழுந்து வந்து சரித்திரமாவதும்
இரண்டுமே புதிதில்லை!
அவன் தமிழன் என்கிற
ஃபீனிக்ஸ் பறவை!!
(((இது பிரபு என்கிற எனக்காக நானே எழுதிகொண்ட கவிதை!! உயிரோடு இருப்பவர் பற்றியோ, இறந்தவராக கருதப்படுபவர் குறித்தோ எழுதப்பட்டதில்லை!!)))