
அன்பிற்கினியவர்களே,
ஒரு வாரமாக, முந்தைய தொடர்ச்சியாக எண்ணங்கள் மறுபடியும் வேர் பிடித்து, எரியீட்டிகளாகவும், எகிறும் பந்துகளாகவும் ஆர்ப்பரித்து, மேலெழும்பி, மோதி, பின் நுரைதழும்ப கடலுக்குள் போகும் அலைகள் மாதிரி இல்லாமல், தொடர்ந்து அடித்து அடித்து மனதை சின்னச் சின்ன சில்லுகளாக பெயர்த்துக் கொண்டிருக்கின்றன! எப்படி ஒரு மரணம் மாற்று எண்ணத்தாலோ அல்லது காலம் தரும் மறதியால் மட்டுமே ஈடுசெய்ய முடியுமோ, அப்படித்தான் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அளவுகடந்து ரசித்து, நேசித்து, பருகி, மயங்கி வேட்டியவிழ்வது தெரியாமல் தள்ளாட்டத்தை சமாளிக்கவே போராடுவது மாதிரி ஹிட் கவுண்டர்களையும், விருதுகளையும் கைமுழுக்க வைத்துள்ள கோலிகளை கண்கள் விரிய எண்ணும் சிறுவன் அளவுக்கு மகிழ்ந்து முடித்துவிட்டேன்.

சட்டென விழிப்பு வந்தவன் மாதிரி, எதிர்திசை வாகனங்களின் வேகத்தை இத்தனை நாள் என் நகர்வாக எண்ணியது காட்சிப்பிழையென்றபடியென உணர்ந்து, படபடத்து மறுபடி அடங்கிப் போய்விடுகிறேன். காடும் மலையும் நூறு நூறு ஆண்டுகளாய் சாட்சி நிற்பதில் பயனுண்டு. மணிதப்பிறவியின் ஆயுட்காலத்தையும் அதுபோலவே கழிப்பதில் என்ன பயன் என்கிற ஆதாரக்கேள்விகள் செயல்முடக்கிப் போட்டுள்ளன. திசையும் வழியும் அறியாத குருட்டு ஊமையின் ஆராய்ச்சிப் பயணமாய் இங்கிலீஷில் ஒரு ப்ளாக், சபா நாடக ஒத்திகை என என் பாதைகளை முன்னோக்கி நகர்த்தும் முயற்சிகளை கைகொள்கிறேன்! மறுபடியும் விழிப்பு, குழப்பம்!

மேற்பரப்பில் பயணம் தொடர்கிறது, ஆழத்தில் முடித்துக்கொண்டபடி! நடுநிசி கழிந்து விடிவெள்ளிக்கும் முந்தைய ஜாமத்திலேயே, எதிர் வீட்டு முகப்பு மரத்திலிருந்து ஒற்றையாய் கூவத்தொடங்கிய குயில் தந்த ஆச்சர்யங்களை நிறைத்தபடி செல்வேந்திரனின் புதிய பதிவை தேடிப்போகிறேன், படித்தவுடன் தூங்கப்போகும் திட்டத்தோடு!
கருத்துக்களோடு நான் முரண்பட்டாலும், செல்வேந்திரன் எழுத்துக்களோடு உடன்படும் இயல்பெனக்கு! தொலைப்பேச்சோ நேர்பேச்சோ, எப்படிப் பேசினாலும் 10 வருடங்களை குறைத்து வயதை பின்னோக்கி இழுத்துப்போகும் இளைஞன், நேரடியாகச் சொல்லாமல் தனக்கு வந்த, தான் அனுப்பிய வலிமிகுந்த மின்னஞ்சல் நகல்களால் வருத்தப்பட்டிருந்த பதிவு அது. சிங்களத்து க்ளஸ்டர் குண்டுகளுக்கு இரையான பல்லாயிரம் தமிழ் உயிர்களோடு ஒரு பால்யத்து பேனா நட்பும் பலியாயிருந்தது. நீண்ட பிண்ணூட்டங்களை பதிவுலகம் ஆதரிப்பதில்லை என்கிற காரணத்தால் பதிவாகவே ஒரு பதிலிருக்கிறேன், அந்த குயிலும் தூங்கிப்போன விடிகாலையில்!

வணக்கம் செல்வா, உங்கள் வலி புரிகிறது எனினும் இதற்கு மேல் (எந்த விவரமும் தெரியாமல்) உங்கள் சொந்த விஷயம் பேசமுடியாது. ஆனால்...
அங்கே இலங்கையில் போராக நிகழ்ந்த போதும், இனப்படுகொலையாக முடிவுற்ற போதும், இப்போது எல்லாமே கைமீறி போனபின்னரும், தமிழ்நாட்டு தமிழர்களாகிய நாம் வினைத்தொகை மாதிரி வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோமே தவிர, யழவு எதையும் செய்யமுடியலையே! சமீப நாட்களாய் மனதை அறுத்துக்கொண்டிருக்கும்; எனக்கு நான் கேட்டுக்கொள்ளும் கேள்வியை உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது உங்கள் பதிவு! தவிர யாரை யார் கேள்வி கேக்க முடியும்? இல்லையா.... கேட்ட கையோட முத்துகுமார் மாதிரி போயிட்டேயிருக்கனும்! இருந்து கண்டு சகிக்க முடியல தோழா!

ஒன்னுமே செய்ய முடியாம போச்சே.....அங்கிருந்து அவங்களும் அதத்தானே கேக்கறாங்க! ’தண்ணிர் தண்ணிர்’ படத்துல பிரச்சனைக்காக போராடும் முடிவெடுத்தபின் “உசிரென்ன அத்தன வெல்லக்கட்டியோ” என்பதாய் ஒரு கிழட்டுக்குரல் ஒலிக்கும். நமக்கெல்லாம் அந்த உசிரு வெல்லக்கட்டியினும் மேலாகப்போய்விட்டது! உடனே உசிருக்கு உசிருதான் பதிலா? முத்துக்குமாரும் இன்ன பிறரும் செய்தது தவறுன்னு ஆரம்பிச்சிருவாங்க! விடுங்கையா, என் நண்பன்கிட்ட அழுதுட்டு போறேன், வெலகுங்க! நல்ல நினைவு தெரிந்த நாள் முதல் இலங்கைனாலே தமிழன அடிக்கிறாங்க, கொல்றாங்கன்னு காதுல கேட்டு கேட்டு மன்சே மறத்துப்போச்சோ? முக்கியமான சீன்ல ஃபெர்பார்மன்ஸ் பார்த்து அழற மாதிரியில்ல தற்காலிகமா துக்கம் வருது! அகநானூறு, புறநானூறு பத்தி இங்கிலீஷ் மீடியம் படிக்கிற பசங்களுக்கு தமிழ் செகண்ட் பேப்பர்ல வர்ற ரொம்ப கஷ்டமான ஒரு மார்க் கேள்விகள் மாதிரி, தமிழர் வரலாறுகள் சொல்லும் வீரமும் நமக்கு நினைவுலயே இல்லையோ என்னமோ?

எல்லார்த்துக்கும் இதே நிலைதான், அது நிச்சயம்! ஆமாங்க, ராமேஸ்வரத்து கடல்ல நம்ம தமிழநாட்டு தமிழர்களை அடிச்சாலும் நமக்கு வலிக்க மாட்டேங்குது! அதுக்கெல்லாம் நாம யாரும் காரணம்கூட கேக்கறதில்லை. ஏதோ இராமேஸ்வரத்து லா அண்ட் ஆர்டர் பிரச்சணை மாதிரியில்ல விஷயம் போகுது! வேனுன்னா பாருங்க, அப்பிடியே உள்ள வந்து, மதுரைல அடிச்சாலும், டிவில லைவ்தான் பார்க்க போறோம்! இல்ல இந்த பக்கமா சுத்தி வந்து சென்னைல எங்களையெல்லாம் ஒரு காட்டு காட்டினாலும் கோயமுத்தூர்ல துடிச்சு எழுந்திரபோறீங்களா? அப்பவும் நமக்கான ஒரு அரசியல் காரணம் இல்லாமலா போயிடும்? அப்பிடி ஒருவேளை நடந்தா நம்ம சொந்த ஊர்ல ஒரு நண்பன் எப்படி கோவிச்சுக்குவானோ, அப்பிடித்தான் உங்க நண்பர்களும் கோவிச்சிட்டாங்க போல! எனக்கே இப்பிடி யாரோ கேள்வி கேக்கற மாதிரியும், உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியுஇந்தான் கடந்த ரண்டு மாசமா ஒரு நினைப்பு! ஒரு வேளை உங்க நண்பர்களோட பதில் உங்களை காயப்படுத்திருந்தா, இதேமாதிரி காயங்களோட உங்களை சுத்தி பல பேரு எந்திரன் ரிலீஸ் பத்தியோ, இடைத்தேர்தல்லயும் காசு தருவாங்களாங்கறத பத்தியும் சும்மா பேசிட்டிருக்கோம்னு நினைச்சிக்கங்க! இன்னும் சொல்லப்போனா நீங்க மனசு விட்டு சொல்லீட்டீங்க! ஆனா என்னை மாதிரி ஆளுக அதைய சொன்னம்னா, எவன் எப்பிடி திட்டுவான், இல்ல என்ன பாலிடிக்ஸ் பேசுவான்னு ஊமைக மாதிரி திரியறம் பாருங்க...ரொம்ப கஷ்டம்!!

எனக்கென்னவோ போர் மறுபடியும் வரும்னு தோனுது! அது அவங்களுக்கு விடிவோ இல்லையோ, இங்க குமுறிட்டிருக்கறவனுக்கு ஒரு வாய்ப்புன்னுதான் நினைக்கிறேன்! எத்தனையோ முறை இங்க மூலை முடுக்குலருக்கற கிராமங்கள்ருந்து பொருட்கள் போயிருக்குதாமா, நாம மனசு வச்சா போக மாட்டமா? என்க்கென்னவோ இனி நடந்தா அப்பிடித்தான் நடக்கும்னு தோனுதுங்க! அப்பிடி ஒரு படை அணிவகுத்து கிளம்பிச்சுன்னா, ஒருத்தனுக்கொருத்தன் சொல்லாம, வாதம் பண்ணாம எந்த வரிசைல யார் இருப்பம்னு சொல்லமுடியது! ஆனா இருப்போம்!!
செல்வேந்திரனின் பதிவு: சொற்களெடுத்து எறிந்தாய் தோழி!



























