Tuesday, June 30, 2009

திரட்டி நட்சத்திர பதிவு: சொர்க்கத்தின் மறுபுறம் நரகம்

ஒரு முன்னுரை

கவிதைக்கு எப்படி முன்னுரை?

காரணமிருப்பதாக நினைக்கிறேன். இதை எழுதும் போது சிலநாட்கள் கடுமையான மருத்துவ சிகிச்சையில் பெத்தடின், பெண்டதால் மற்றும் பல பெயர் தெரியாத மருந்துகளின் ஆளுமை முடியத்தொடங்கியிருந்தது.

1995 டிசம்பரில் என் 4 எலும்புகள் முறிந்து ப்ரெய்ன் ஹேமரேஜாகி நான் கோமாவில் கிடப்பதற்க்கு முந்தைய ஒரு சனிகிழமை கோவையில் முதன்முதலாக நடந்த சன் டிவி அரட்டை அரங்கத்தில் நான் பேச்சாளன். முதன் முறையாக பெரிய சபை கைதட்டல், இடைவேளையில் பாராட்டு. மகிழ்ச்சியாயிருந்தது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை ஆசையாய் ஒரு செகண்ட் ஹேண்ட் டீசல் புல்லட் வாங்குகையில் ஒரு காக்கா குருவிகூட எனக்கு முன்னெச்சரிக்கை செய்யவில்லை, அந்த தண்ணிர் லாரி டிரைவருக்கும்தான். 2 நாளில் வந்த புதன்கிழமையன்றுதான் நான் மேலே போய் ரிஜக்டாகி திரும்ப வந்து கோமாவிலிருந்து கண்விழித்தேன்.

ப்ளாஸ்டர் துணி கட்டுகள், மாத்திரைகள், விஸிட்டர்ஸ், ஸ்கேன், பிஸியோதெரபி என ஒரு சைடிலும் வலி தெரியாமலிருக்க ஊசிகள் மறு சைடிலும் அப்பா காசு ஒன்றேகால் லட்சத்தை ஃபில்லாக திருப்பிக் கொடுத்தார்கள். நான் தந்த எந்நோற்றான் கொல் எனும் சொல்!

3 மாதங்களுக்கு பிறகு……

(அடிபட்ட)கதை சொல்லியே நொந்துபோச்சு!

வேலைக்கு திரும்பினால் பாஃலோ அப் கதை தொடர்ந்தது.  எல்லா கட்டமைப்பையும் உடைப்பவனாக அறியப்பட்டவன், கட்டுகளாய் கிடந்ததை பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் மத்தியில் புலனுக்கு எட்டாத மருந்துகள் செய்யும் பாதிப்பு ஆகியவையுடன் ரெண்டு இறக்கையும் முறிக்கப்பட்ட ஜடாயு மாதிரி தவ்வி தவ்வி ஐயோ பாவம் ரீரிக்கார்டிங்கிலேயே நடந்துகொண்டிருந்தேன்.தூக்க மறுப்பு, அதிசிந்தனைகளை மறுதலிக்க மேலும் மாத்திரைகள். அப்போ 1996 சனவரியில் தோனின கவிதை!

 

இனி வரும் மடித்து எழுதப்பட்ட வரிகளை கவிதையாக பாவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

உனக்குத்தெரியுமா?

நான் நேசிப்பவரெல்லாம்

என்னையும் நேசிக்கிறார்கள்!

ஒருசிலர் பாரட்டும்

பகைமையின் காரணம்

புரிந்தததாய் புலப்பட்டாலும்

புதிர் போலவே தொடர்கிறது!

 

அடுக்குகளாய்

ஏற்றிய அரிதாரம்

அலுத்தாலும்,

அகற்ற

எனக்கு

அனுமதியில்லை!

பழைய முகம்

அழகுதான்!

ஆனாலும்

பழக்கம் காரணமாய்

அவர்கள்

அணுமதிப்பதில்லை!

 

எனக்குத் தெரியும் – இது

வித்தை கூடாரம்.

எல்லோர்கும் தெரியும்

என் விருப்பத்தொழில்

கம்பங்கூத்து!

அப்புறம் எதற்கு

இந்தச் சில நாட்கள்

என்னை

காட்சிக்குள்ளும்

பார்வையாளனாகவே

கட்டிப்போட்டது

விதிக்கயிறு!!

 

நடுராத்திரியில்

பதறி எழுந்து

தூக்கம் நழுவி

இரசித்து இரசித்து

எழுதி பத்திரப்படுத்தும்

இந்தக் கவிதைகள் தவிர

வெட்டி யோசனைகள்

விளைத்தது

ஒன்றுமில்லை!!

தங்கத்தலைவன் நீரோ வாழ்க!

nero

நாலு புறமும்

சூழப்பட்ட

கோட்டையில்

ஹிட்லர் மாதிரி

விஷம் குடித்தாலும்

மரணம்!

 

சதாம் மாதிரி

பிடிபட்டாலும்

மரணம்!!

 

நிம்மதியாய்

பிடிலோ எதுவோ

வாசிக்கலாமே!

Sunday, June 28, 2009

+2 பையன்களுடன் ஒரு LKG பொடியன்!

பொதுவா இந்த இலக்கியவாதிகள் சந்திப்பு,இல்லன்னா எழுத்தாளர்கள் சந்திப்பெல்லாம் காரசாரமா இருக்கும். சமயத்துல அடிதடிகூட நடக்கும் என்ற ஒரு மன அமைப்பு(Mind Set) எனக்கு உண்டு. அதிலும் ப்ளாக்கர்கள் என்றால் ஏனோ ஒரு கூடுதல் பயம். காரணம் ஒரு சில பதிவுகளில் இருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம். எனவே சென்னை ப்ளாக்கர்கள் சந்திப்பு என்கிற தகவல் குறித்தான என் அனுகுமுறை, +2 பப்ளிக் எக்ஸாம் நடப்பது பற்றிய ஒரு எல் கே ஜி பையனின் அக்கரையாகத்தான் இருந்தது.

கடந்த வாரத்தில் திரட்டி டாட் காம் திரு. வெங்கடேஷ் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை திரட்டி தளத்தில் நட்சத்திரமாக இருக்க சம்மதமா என்றொரு மெய்ல் அனுப்பியிருந்தார். சத்தியமா சொல்றங்க உண்மைலயே கண்ண கட்டிடுச்சு! எப்போ எந்த இடத்துல யாரு என் சட்டைய கொத்தா புடுச்சு "ஏண்டா தமிழ்ல இலக்கணம் ஒரு மண்ணும் தெரியாம ப்ளாக்காடா எழுதுற" என்று ரண்டு அப்பு அப்பிடுவாங்களோ! என்கிற பயம் எப்போதும் எனக்கு உண்டு!! இப்படி ஒரு நேரத்தில் "நீங்களும் பதிவர்தான் நண்பரே" என்பதோடு கூடவே ஒரு வாரத்துக்கு ஸ்டாரும் கொடுக்க அட சென்னை பதிவர் கூட்டத்துக்கு போலாம் போல இருக்கே! என்கிற தைரியம் வர, பின்னாலயே வந்த பயம் அப்பு பற்றியதாக இல்லாமல் அறிவு பற்றியதாக இருந்தது . "துவம்" "இயம்" என்பதெல்லாம் தெரியாமல் இங்கல்லாம் வருவியோ? என கற்பனையில் யாரோ மிரட்டினார்கள்.

ஆனாலும் இந்த பதிவர்கள்லாம் எப்படி இருப்பாங்க? எப்படி பேசுவாங்க? என்கிற ரேடியோவுக்குள் இருக்கும் குட்டி மணிதர்களை வேடிக்கை பார்க்கும் குழந்தைதனமான ஆர்வம் இருந்துகொண்டேதானிருந்தது, கூடவே அப்பு விழும் பயமும்! 28.6.2009)மாலை நண்பரும் நலவிரும்பியுமான எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தி என்னிடம் "நடேசன் பூங்காவுல சென்னை பதிவர் சந்திப்பு..." என்று முடிக்கும் முன்னர் "சார், நீங்க போனா நானும் வர்றேன்" என்று முந்திக்கொண்டேன். நடேசன் பூங்காவை நெருங்க நெருங்க என் மனோபாவம் மேல் வகுப்பில் படிக்கும் அண்ணன் தன் குட்டித் தம்பியை "வாடா, யாரும் அடிக்க மாட்டாங்க" என்று கையை பிடித்து அழைத்துச் செல்லப்படும் ஒரு எல்கேஜி பொடியன் போன்றுதான் இருந்த்து.

"எங்காவுது ரவுண்டா உக்காந்து பேசிக்கிட்டிருப்பாங்க, கண்டுபுடுச்சிடலாம்" என்று பாஸ்கர் சார் சொன்னார். பூங்காவின் உள்ளே முதலில் தென்பட்டது ஒரு நடுத்தரவயது பெண்கள் ஜமா. வட்டமாக ஒரு 10 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். "இது எப்படி, வெறும் லேடீஸா இருக்காங்களே" என்று வழக்கம் போல் கண்ணில் காணும் எல்லாவற்றுக்கும் குழம்பிப்போவேன் என்கிற என் ஞானம் குறித்து நன்கறிந்த அனுபவதிருஷ்டியால் யூகித்துக்கொண்ட அவர் "வாங்க எங்காவது உள்பக்கமா இருப்பாங்க" என்றார். அது போலவே எக்ஸ்டிரா லாங் மிட் ஆன் புல்தரையில் ஒரு மனித வட்டம் தட்டுப்பட்டது. மாலை 6.30 மணி இருட்டில் நடேசன் பார்க்கிலிருந்து ஆந்திரா அல்லது பாகிஸ்தானுக்கோ நான் தப்பி ஓடுவதறக்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவே மனதில் பட்டாலும் சென்னை பதிவர்கள் வட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தேன்! அருகில் செல்ல வட்டத்திலுள்ளவர்கள் அவர்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் வாரி வர்ணம் பூசி வெடித்து சிரித்தது கொஞ்சம் கலக்கியது. "அப்பு விடுவதற்கு பதில் "அட நீயெல்லாம் ப்ளாக் எழுதுறியா! ஓ அந்த டப்பா ப்ளாக் நிதானா" என்று தொடங்கி கேலி, கலாசல், வாருவது, வறுப்பது என என்னை கொட்டி கும்மியடிக்கப்போகிறார்கள் என்று வழக்கம் போல் என்னைப்பற்றியே பிரதானமாக கொண்டு சிந்தித்து கொண்டிருந்தென. பல புன்னகை முகங்கள் வரவேற்க கொஞ்சம் ஆசுவாசம். ஒருவர் படக்கென கேமிராவை போகஸ் செய்து என்னையும் பாஸ்கர் சாரையும் போட்டோ எடுத்தார். 'ஆஹா... போட்டோவா? ஆட்டோ அனுப்புவாங்களோ?!!' என்கிற திகில் படர்ந்தது! அப்போது வந்த எங்களுக்காக மீண்டும் ஒரு அறிமுகப்படலம். அங்கிருந்த ஒரே ஒரு பரிட்சையமான முகம் பதிவர் கேபிள்காரன். முன்பு நான் கோலங்கள் தொடரில் இயக்குனரிடம் வேலை பார்த்தபோது நடிகராக அறிமுகமானவர். இப்போது மனந்திருந்தி நடிப்பதை விட்டுவிட்டதாக பிற்பாடு சொன்னார். திரைகதைகளும், வசனமும் என பலதிசைகளில் கலக்கிகொண்டிருக்கிறார். அறிமுகத்தில் ஒவ்வொரு பெயர் சொல்லப்படும் போதும் வட்டத்தின் இன்னொரு புள்ளியிலிருந்து எழும் உடனடிப் பின்னூட்டத்தால் வட்டம் நீள்வட்டமாக சிரிப்புகளால் பொங்கியது.

20 - 20 மாதிரி எல்லோருமே சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகவே அடித்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் மைக் கிடைத்தும் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் நமக்கு கிடைத்த ஸ்டாரைப் பற்றி சொல்லுவோம் என்று நினைக்கையில் ஒருவர் "இப்பல்லாம் இந்த நட்சத்திரம் அங்கீகாரம் ரொம்ப சாதரணமாயிடுச்சுங்க" என்று தொடங்கி நான் என் ஸ்டார் பற்றி பேசும் தீர்மானத்தை மனதுக்குள் கைவிடும் வரை வாரிக்குவித்தார். 'சரி விடு, கவிதை எழுதுவோம்ல, அதுல ஒன்ன சொல்லிப்புடுவோம்", என எப்படியும் கூட்டத்தில் விழும் ஒரு மாலையையாவது வீட்டுக்கு ஆட்டைய போட்டுட்டு போகும் அரசியல்வாதியாய் பரபரத்தேன். இநத முறை "தினதந்தி செய்திய மடிச்சு மடிச்சு எழுதிட்டு கவிதன்னு சொல்லறது மகாதப்பு" என்றொரு ஸ்கட் வந்து விழ "ஜஸ்ட் எஸ்கேப்புடா" என்ற பெருமூச்சுடன் பார்வையாளனாகவே தொடர்ந்தேன். ப்ளாக்கில் எழுத்துக்களை பார்த்து, எப்படியும் ஒரு 6அடி 8 அங்கூலம் இருப்பார் என நினைத்த ஒரு ப்ளாக்கர், பக்கத்தில் நிற்ப்பவனுக்கெல்லாம் அவ்வப்போது ரண்டு அப்பு அப்புவார் என நான் பயந்த ஒரு பதிவர், அட, இவர்களும் எழுதி நானும் எழுதனுமா என்று என்னை தி.மோ ஜில்ஜில் ரமாமணியாக்கியவர்கள் என எல்லா +2 பையன்களுக்கும் சமமாக ஒரு எல்கேஜி பொடியன் உட்கார்ந்திருந்தேன்.


சிரிப்புகள் பஞ்சமில்லாமல் தொடர்ந்தது. பல வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி வலந்தாயமரத்திலுள்ள ஒரு தோப்பில் திரு. லோகநாதன் செட்டியார் மாதா மாதம் நடத்தும் ஓஷோ தியான முகாமில் இரவு நேரத்தில் நிகழும் சத்சங்கத்தில் மனம் விட்டு அனுபவித்த சிரிப்புகள் நினைவு வந்தது. 'அடங்கப்பா இப்படி சத்தமா ஜாலியா சிரிக்கறவங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!"

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புல்தரையை விட்டு எழுந்தார்கள், எல்லோரும் டீக்கடை போனோம். தம்மும் டீயுடன் சிரிப்பும் சேர்ந்து அங்கும் அரை மணி நேரம் ஓடியது. பதிவர்கள் திரு.பாலபாரதி, திரு. ஆசிப் மீரான், திரு. நர்சிம், திரு. பட்டாம்பூச்சியார், திரு. டோண்டு ராகவன் என நிறையப்பேரிடம் பேசினேன். பாதி முகங்கள் பெயரோடு நினைவுள்ளது, மீதம் பேரையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

டீக்கடை வாசலில் மெல்லக் கரையத் தொடங்கிய கூட்டத்தில் மீதமான ஒரு சிலர் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் கொஞ்சநேரம் நிற்ப்பார்கள் போலும்! பலகாலங்களுக்கு பிறகு ஒரு அருமையான மாலைப்பொழுது.

இரவில் உள்ளிட்டதை விடிந்தவுடன் பதிக்கத் தொடங்கையில் இந்த வாரம் திரட்டியில் ஸ்டாரகியிருந்தேன். நன்றி வெங்கடேஷ், இது எனக்கு என் அருமை நண்பர்களுக்குப்பிறகு ஒரு நிறுவன் அல்லது அமைப்பு தரும் நிறைவான மற்றும் முதல் அங்கீகாரம்.

Friday, June 26, 2009

ஆ, உள்ளாடைக்கு தடையா??

என்ன சொல்ல வர்றாங்க?
1. அதையும் கூட அணியாமதான் குளிக்கனுமா?
2. சட்டைய பேண்ட்ல இன் பண்ணிட்டுகுளிக்கனுமா?, அதற்கு் ஷூவும் அணியவேண்டுமா?
3. இந்த தக்க நடவடிக்கைன்னா என்ன? உள்ளதையும் கழட்டிட்டு அனுப்பிச்சுடுவங்களோ?

திப்பரப்பில் இந்த பரபரப்பு நடந்த காலகட்டம் 1996. ஒரு பஸ் வழியா கோவையிலிருந்து ஆபிஸ் டூர் போன நாங்க 50 பேரும் அருவில பாய்ஞ்சோம். அருவியில் படுவேகமா 15 நிமிஷத்துக்கு ஒரு குடம் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஊருல தெருமுனை பைப்படில தண்ணி பிடிக்கற க்யு மாதிரி நின்னு நம்ம டர்னுக்காக காத்திட்டிருந்தப்போ இந்த அறிவிப்பு பலகை கண்ணுல பட, நம்ம கற்பனை அருவி பொத்துகிச்சு!
புகைப்பட விவரங்கள்
கேமரா: நிக்கான் FM 10
லென்ஸ்: நிக்கார் 30 - 70 AE Mount
லைட்: திப்பரப்புல என்ன லைட்டு வேண்டிகிடக்கு? நாங்க போன டூருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாம் அடிச்சு கழட்டிகிடிருந்துச்சு
மாடல்: பாலசுப்பிரமணியம்(என்ன சூப்பர் ஃபிகர் மச்சான்? 13 வருஷமாச்சு! இப்போ குழந்தை குட்டி தொப்பை என செட்டிலாயிருப்பார். யாராவது கோயமுத்தூர்காரங்க பாத்தீங்கன்னா, பாலுகிட்டே ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க!)

Wednesday, June 24, 2009

ஆக்ராவில் இந்த சிவப்பு டீசர்ட் பெண்ணை கடத்த நான் செய்த முயற்சிகள்!!

scan0001

டெல்லிக்கு டூர் போன எல்லோருமே பெரும்பாலும் ஆக்ரா போகாமல் வரமாட்டார்கள். 1996ல் இப்போது 2009ல் உள்ள மாதிரியே எஞ்சினியரிங் துறையில் ஒரு உலக அளவிலான பின்னடைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் டிசைன் துறையில் பிளாஸ்டிக் மோல்ட் டிசைனராக இருந்தவனை. பாலா என்ற ஒரு நண்பன் என்னிடம் ஒரு சவாலான, சுவாரஸ்யமான வேலை என்றெல்லாம் மோடி மஸ்த்தான் போல பேசி என்னை மார்கெடிங் துறைக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டான். நான் போன நேரம் குருவி உட்கார Palm Fruit விழுந்த கதையாய் சிலபல ஆர்டர்கள் வர, எனக்கெந்தவிதமான ஸ்டார் அந்தஸ்த்தும் தராமல், ஊர் சுற்ற அனுப்பினார்கள். முதலாளிகள் பற்றி அறியத்தொடங்கிய பருவம். ஆனாலும் அனுப்பிய இடம் டெல்லி என்பதால் ஒரு பரவசம்.

அந்த காலகட்டத்தில் ஒரு இரவல் மேன்யுவல் கேமராவை வைத்துக்கொண்டு போட்டோகிராபி மேல் அகத்திய தாகம் கொண்டு அலந்து கொண்டிருந்தேன். எங்கு போனாலும் கேமரா உடன் வரும். அந்த காரணத்தினால் என் நண்பர்கள் என்னை போட்டோகிராபர் என ஒத்துக்கொண்டார்கள்.

டெல்லிக்கு புறப்படும்போதே பலரும் கண்டிப்பா ஆக்ரா ஃபேடா வாங்கி வா என்றார்கள். சிலர் அதை பேஃடா என்றனர். நெல்லிகனி காணப்போகும் அதியமானாய் கிளம்பினேன்.

டெல்லி ஒரு வித்தியாசமான இடம்தான், அங்கிருக்கும் எல்லா பயலும் ஆங்கிலம் பேசமாட்டோம் என அடம்பிடித்தார்கள். இந்த விஷயத்தில் மும்பை ‘பர்வா இல்லே’ ரகம்.

PICT0022 (பாலா தன் வாரிசுடன் – புது படம்)

ஏதோ பாலா முற்காலத்தில் கற்ற முக்கால் படி ஹிந்திதான் என்னைக் காப்பாற்றியது. ஆனாலும் காதலால் நிறைக்கப்பட்டிருந்த என் இதயம் பாஷைகளில்லாத பார்வைகளாலேயே தவணை முறையில் பறிபோய்க்கொண்டிருந்தது. டெல்லியிலிருந்த போது Travalogue, diary, கவிதை என்று நான் எழுதிய எல்லாவற்றையும் பாலா படித்தேயாகவேண்டிய கட்டாயத்திலிருந்தான். பாலாவிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், என்னைப் பாராட்டிப் பாராட்டி கவிதை, கதையெல்லாம் எனக்கு எழுதவரும் என்று நம்பவைத்த ஒரு கூட்டுச்சதியில் பங்குகொண்டிருந்தான். இதையெல்லாம் கண்டிக்க ஆளில்லாமல் வளர்ந்த காரணத்தால், இப்போ நிலைமை முற்றி ப்ளாக் வரை வந்துவிட்டது. பயமில்லை மனோதத்துவ டாக்டர் விஜயகுமார் மருந்து கொடுத்து சீக்கிரம் குணப்படுத்தி விடுவதாக உறுதி கொண்டிருக்கிறார்.

இயக்குனர் எவரஸ்ட் பாரதிராஜா தொடங்கி எல்லா படைப்பு சிகரங்களும், மலைகளும், குன்றுகளும் வடக்கேயிருந்து மெலனின் குறைபாட்டால் வரப்பெற்ற வெள்ளையும் மஞ்சளுமான் நிறம் மட்டுதான் அழகே அழகு, தேவதை என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து வார்த்து வளர்த்த வளர்ப்பு நான். டெல்லியில் பிச்சைக்காரிகள் கூட அந்த சொல்லித்தரப்பட்ட தேவதைகள் நிறத்திலிருந்தபடியால், நான் பேதமில்லாமல் நிறம் மாறாத பூக்கள் பாக்யராஜ் மாதிரியும், டிக் டிக் டிக் கமலஹாசன் மாதிரியும், முரட்டுக்காளை ரஜினி மாதிரியும் கண்ணில் பட்ட மஞ்சாகலர் பெண்களிடமெல்லாம் கண்ணா பின்னாவென ஒவ்வொருவரிடமும் நான் காதல் வயப்பட, சிகனலில் பச்சை விழுந்தவுடன் ஆள் மாறிக்கொண்டேயிருந்த்து.

டெல்லியிலிருந்து ஏதாவது . ஒரு பட்லியை லவட்டிக்கொண்டு போய்விடலாமா என்ற திட்டம் சைடுக்காய் ஓட, என் கம்பேனி வேலையும் பார்த்தேன். பாலவின் ஹிந்தியும் கடமையுணர்ச்சியும் என்னை காப்பாற்றி என் காதல் மனசையும் காப்பாற்றியது. டெல்லியில் பயல்களும் பெண்களும் தம்மை(சிகரெட்டை) குறைவாகவும், வெற்றிலையை அதிகமாகவும் உட்கொண்டு துப்பிகொண்டிருந்தார்கள். பால் பேதமில்லாமல் பான்மசாலா உலாவியது. ஹன்ஸ் மாதிரியான வஸ்துக்களையெல்லம் முதன் முறையாக அங்குதான் பார்த்தேன். முந்தைய வருடம்தான் ஒரு பெரிய மீடியம் சைஸ் விபத்தில் தலையில் பிரெய்ன் ஹேமரேஜ் ஆகி கோமாவுக்கெல்லாம் போனதால் பான் முயற்சிகளை செய்யவில்லை. உடன் வந்த பாலா வேலையில் புலி, ஆனால் இந்த சமாச்சாரங்களில் பழம். ரண்டுபேரும் ரொம்ப வித்யாசமாய் ஏதாவது சாப்பிட எண்ணி ஒரு ஹிந்திக்கார ஹோட்டலுக்குப் போய் “தஹி வடா” ஆர்டர் செய்து பரவசத்துடன் காத்திருக்க, சர்வர் அழகாக நம்ம ஊர் தயிர்வடையை கொண்டு வந்து கொடுத்தான். அன்றோடு வித்தியாச சாப்பாடு ஆசையை கைவிட்டு விட்டோம்.

டெல்லியில் எல்லா வயது பெண்களும் ஸ்லீவ்லெஸ், ஹைஹீல்ஸ், போனிடெய்ல் என பின்னாலிருந்து பார்ப்பவனை ஓவராக கற்பனை செய்ய வைத்து ஏமாற்றினார்கள். மூலைக்கு மூலை AK உறவின்முறையில் என்னவோ ஒரு செவனை வைத்துக்கொண்டு போலிஸ் நின்றது! இப்ப நம்ம ஊரும் அந்த லட்சணம்தான்னு வைங்க! முக்குக்கு முக்கு பார்க், புல்தரைன்னு பசுமையா இருந்தது. ஆனால் அந்த பார்க்கில் ஒன்னு சீட் விளையாண்டார்கள் இல்லை படுத்து தூங்கிகொண்டிருந்தார்கள்! ஒரு பாப்பா மட்டும் வீட்டில் புருஷன்கூட சண்டை போட்ட மாதிரி மூஞ்சிய சோகமா வச்சிகிட்டு மத்தியான சாப்பாடு சாப்பிட்டுகொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு சுமார் 12 மணியிருக்கும் பூட்டிய லாட்ஜ் கதவையும் மீறி பாங்கரா மேள சப்தம் பட்டை எடுக்க, என் ஆழ்மனதில் தங்கத்தமிழ்மகனின் குத்தட்ட உள்புத்தி கண்விழித்தது. 6 டிகிரி குளிரில் வெளியே வரவே மாட்டேன் என்று அடம் பிடித்த நண்பனைத் தவிர்த்து ஒரு பிட்டு ஹிந்திகூட தெரியாத நான் உள்டெல்லிக்குள் இரண்டு தெருக்கள் கடந்து அந்த தேவகானம் வந்த திசை நோக்கி நடந்தேன். டக்கென அந்த பாங்கரா சூழல் வந்துவிட்டது. புல் சவுண்ட், சென்னையில் எந்த கமிஷனரும் அணுமதிக்கமாட்டார்கள். பெரும்பான்மையானோர் பெரிய அளவு மப்பிலும் மற்றவர்கள் சிறிய அளவு மப்பிலும் இருந்த்ததால், யாரும் என்னை கவணிக்கவில்லை. பெரிய கூட்டம் ,300 பேருக்கும் மேல் இருந்தார்கள். அதில் இளம் பெண்கள் நிறைய இருந்தனர். நல்ல திக் கலர் உடைகள், வலது தோளில் சாயும் தாவனிக்கட்டு…. அட்ங்கொக்கமக்கா பேசாம கன்வர்ட்டாயிடலாமா! கரண்டி கரண்டியாய் தொங்கும் ஹிந்தி எழுத்துக்களை படித்து, கடித்து அங்கேயே செட்டிலாகிவிடலாமா என்ற பேய்க்கற்பணைகளை அங்கிருந்த சோன்பப்டிகளும் சோக்கான வாலிபர்களும் உருவக்கினார்கள். அது என்னங்க கலரு, அப்பிடியொரு கலரு! எது அசைஞ்சாலும் சரி இல்ல குதிச்சாலும் பரவாயில்ல, அது மொத்தமா தெரிஞ்சாக்கூட பரவாயில்லன்னு….. அடடா, அடடா என்ன ஆட்டம், என்ன சிரிப்பு! அவங்க கைய தட்டறதுகூட ஒரு தினுசான ஸ்டைலுதாங்க! புளகாங்கிதம் பொங்க இமைக்கமறந்து பெப்பபே என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்ப டபால்னு சில பேரு (ஓல்டு ஆம்பிளை டாக்ஸ்) ஆளாளுக்கு கைல நூறு ரூவா கட்டெடுத்து வச்சிகிட்டு ஆடறவங்களுக்கு ஒரொரு நோட்டா திருஷ்டி கழிச்சு எறியறான், எறியறான் எறிஞ்சுகிட்டே இருக்கறான். நான் அப்ராக்சிமேட்டா போட்ட கணக்குப்படி அன்னைய தேதிக்கு அவனுங்க என்னோட 6 மாச சம்பளத்தை வீசிருக்கறானுங்க கொலைகார பயலுக! இப்படி மகராசனுங்கள விட்டுட்டு “அடப்பாவிகளா இந்த டெல்லில உப்பேயில்லாத உப்புமாக்கு 20 ரூவாயாடா” என்கிற என்னை மாதிரி மதராஸிகளை இந்த டெல்லிவாழ் பட்லிகள் கடைக்கண்ணில்லை , வாசப்படி கண்ணுல கூட பாக்கமாட்டாங்கன்னு புரிஞ்சுகிட்டு ஹிந்தி கத்துக்கற ஐடியாவ அங்கியே அப்பவே டிராப் பண்ணிட்டேன். இப்பவரைக்கு நான் கத்துக்கல!

fort

காதல் கைகுழந்தையாவே செத்துப்போச்சி! என்ன பன்னறது? மறுநாள் பணிக்கர் டிராவ்ல்ஸ்ல ஆக்ரா போனோம். முதல்ல ஆக்ரா fort அதாவது ஆக்ரா கோட்டை.

பஸ்ல எங்க கூட வந்த ஜோடி ரொம்பத்தான் ஒருத்தருக்கொருத்தர் இழைஞ்சிட்டு வந்து வெறுப்பேத்தினாங்கன்னா, ஆக்ரா கோட்டைல என் கைல கேமரா இருக்கறத பாத்துட்டு ‘எக்ஸ்க்யுஸ்மி ஒன் போட்டோன்னு’ அவங்க கேமராவ என் கைல குடுத்து விதவிதமா கட்டிபுடுச்சி கட்டிபுடுச்சி என்னை போட்டோ எடுக்கவுட்டாங்க! சத்தியமாங்க கூட வந்த என் நண்பன் பாலா என் மன உணர்ச்சிய கொஞ்சம்கூட புரிஞ்சிக்காம ‘பாருடா உன் போட்டோகிராபி திறமை வடஇந்தியாவரைக்கும் பேமஸாகப்போகுதுன்னு’ சீரியஸா சொன்னானுங்க! அதுசரி அவன் இந்தமாதிரி விஷயத்துல ஆல்வேய்ஸ் குட்பாய். நான் எந்த வாய்ப்பும் கிடைக்காததால பேட்பாய் ஆகத்துடிக்கிற குட்பாய்.

scan0001

இந்த ரண்டும் தாஜ்மகால குடுமிய பிடிச்சு நாங்க தூக்கற மாதிரி ஒரு போஸ் எடுங்கன்னு சொல்லி அந்தப்பய பாப்பாவ ரொம்ப கட்டிப்ப்டிக்கிறான். நண்பன் பாலாவோ எந்த சலனமும் இல்லாமல் ‘Making of the Movie” மாதிரி நான் போட்டொ புடிக்கிறத அவன் கேமராவில படம் புடிக்கிறான்.

அவங்க கேமராவ திருப்பி குடுத்துட்டு ஒரு அபவுட்டர்ன் எடுத்து அப்பிடியே நான் போன இடம் என்னோட சிச்சுவேசனுக்கு ரெம்ப பொருத்தமான இடம்ங்க! அதாவது தன் இளம் மனைவி மும்தாஜ் குழந்தைபிறப்பின் போது மரணமடைந்ததால் அப்பிடியே காதல்ல உருகிப்போன ஷாஜகான் உலகத்துலயே மிகச்சிறந்த கல்லறையா, காதல்கோயிலா தாஜ்மஹால உருவாக்கி முடிக்கவும், அவரோட சீமந்த புத்திரன் ஒளரங்கசீப் மன்னர் பதவிக்கு வராரு. அவரு ஒரு கெட்ட டைப்புங்க! எப்படின்னா அவங்கப்பா இந்த இசை நாட்டியம்னு கலைகளுக்கும் தாஜ்மகாலுக்கும் ரெம்ப செலவழிச்சுட்டார்னு கோபப்பட்டு, தன் சாம்ராஜ்யத்துல எல்லா கலைகளையும் தடை செய்யறருங்க! பல கலைஞர்கள் ஊரவிட்டே ஓடிப்போகிற மாதிரி ஒரு நிலைமை. இது தொடர்பாவோ எது தொடர்பாவோ அவங்கப்பா ஷாஜகான் கேள்வி கேக்க, இந்த ஒளரங்கசீப்பு அவங்கப்பாவ கொண்டு வந்து ஆக்ரா கோட்டைல வீட்டுச்சிறை கணக்கா சிறை வச்சிட்டாரு! அப்படி ஷாஜகான் சிறைபட்ட்ட இடத்துலதான் நானும் ஒரு ஃபீலிங்ல நின்னுட்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட ஒரு சிச்சுவேசன் பாத்தீங்களா! அதாவது சிறை வைக்கப்பட்ட நாள்லயிருந்து உயிர்விட்ட நாள் வரை ஷாஜகான் தன் மனைவியின் ஞாபகமாக தான் கட்டிய தாஜ்மகாலை மேற்படி அறைலிருந்துதான் பாத்துகிட்டுருந்தாராம்.

scan0002

taja நீங்க மேல பாக்கற போட்டோக்கள் அந்த ரூமோட பாயிண்ட் ஆப் வியுல எடுத்தது. அதாவது அந்த ரூமிலிருந்து ஜன்னல் வழியாவோ இல்ல அந்த பெரிய சாளரம் வ்ழியாவோதான் தாஜ்மகாலைப் பார்க்க முடியும். எல்லா நாள் இல்லைன்னாலும் ஏதாவது ஒரு நாள், அந்த மகா காதலன் ஷாஜகான் நான் என் கேமரா வழியா பார்த்த வியுக்கள்ல பாத்திருக்கமாட்டாரன்னு ஒரு ஃபீலிங்!(பயங்கர ஃபீலிங்ல)

பிற்பாடு தாஜ்மகாலுக்கு போனோம், அங்கயும் அந்த ரண்டு ரவுசுங்களும் என்னைய போட்டோ எடுக்க சொல்லுச்சுங்க! கட்டிபுடுச்சிகிச்சுங்க, கடுப்புன்னா கடுப்பு அப்பிடி ஒரு கடுப்பு! அந்த பிகர பிக்கப் பண்ணி தூக்கிட்டு போய் இவனை அழவைக்கனுடான்னு ஒரு கோபம். ஆனா அது முடியாது! அந்த பாப்பா எப்படியும் 100 கிலோ இருக்கும், என்னையவிட 1/2அடி ஹைட்டும் அதிகம்! இவன் சுமார் 6.3/4 அடி இருப்பான், நல்ல அகலமான பிரேம்! ஒரு குத்து விட்டான்னா நான் பத்தடி தள்ளிப் போய்தான் விழனும்! பாலா பழையபடிக்கு “பிரபு தே ஆர் வெரி மச் இம்ப்ரஸ்டுன்னு” பாராட்டறான்! தாங்க்ஸ் சொன்ன அந்த ரவுஸுங்ககிட்ட “ இட்ஸ் ஓகேன்னு” சொல்லிட்டு பாப்பாவ கெட்ட ஆங்கிள்ல ஒரு பார்வை பார்த்துட்டு நகர்ந்துட்டேன். ஏதோ நம்மாள ஆனது!

scan0002a scan0004

scan0002

சரிதான் ஊருல நம்ம பசங்க ஆக்ரா ஃபேடா கேட்டாங்களேன்னு போய் பெரிய க்யுவில நின்னு வாங்கினா….. அந்த ஃபேடங்கறது பூசனிக்கா அல்வாங்க! அடத்துரோகிகளா இந்த பூசனிக்கா அல்வாக்காடா இத்தனை பாடு! ஆனாலும் கடையில க்யு குறைஞ்ச பாடு இல்ல! எல்ல ஊருக்காரனும் சொல்லி விட்டிருப்பான் போல!

கடைசிலதான் பெரிய கிளைமாக்ஸ், “ ஒரு கட்டத்துல ஆக்ரா கிராமத்துக்குள்ள போன நானும் பாலாவும் தாஜ்மகாலையே தொலச்சிட்டோம் – பணிக்கர் டிராவல்ஸ் பஸ் எங்கள விட்டுட்டு கிளம்பி நகர ஆரம்பிச்சுடுச்சு” கரெக்டா இந்த சீன்லதான் திருச்சிய சேர்ந்த ஒரு தமிழன் நகரும் பஸ்ஸில் சீட்டை விட்டு எழுந்து எங்களுக்காக போராட தொடங்கறாரு. அது மற்றோரு சமயத்துல சொல்றேன்.

Monday, June 22, 2009

இந்தூரிலிருக்கும் எங்க மாமா பேரு சின்னக்கண்ணான்!


நான் சின்னப்பையனா இருந்தப்ப அப்பாவின் நன்பர் ஒருவர், அவர் எங்கள் சின்னக்கண்ணான் மாமா, அவருடைய காலரில் செருகிய கர்ச்சீப், எண்ணெய் போட்டு படிய வாரிய முடி. மஸ்லின்தனமான ஒரு பளபளா சட்டை, கண்டிப்பாக இம்போர்டட் வாட்ச், சுற்றி வீடு கட்டி அடிக்கப்பட்ட செண்ட்டு! ஆனால் என் அப்பாவைப் பார்த்தால் பயங்கர மரியாதை, குழந்தைச்சிரிப்பு.அவரின் அப்பாவித்தனத்தை விட இந்த ராஜபோக அலங்காரங்கள் எங்களை அந்த வயதில் இந்தூர் எல்லா பொருட்களும் சும்மாவே கிடக்கும் ஒரு அலிபாபா குகை போல கவர்ந்தது.

கொஞ்சம் பெரியவனானவுடன் என் சிறிய அண்ணனுக்கு இந்தூர் செல்லும் வாய்ப்பு வந்தது. என் சின்ன அண்ணன் எங்கள் மூன்று பேரில் குடும்பப்பாசம் அதிகமுள்ளவர், எப்படியும் சில பல வாட்சுகளும், நாலைந்து லிட்டர் செண்ட்டும் வாங்கி வருவார் என் எதிபார்த்தேன். நான் பிரத்யேகமாக அவரிடம் கேட்டது. அந்த ஊர் தீப்பெட்டி அட்டைகள். பட்டையான கல் மூலம் வட்டத்தில் உள்ள தீப்பட்டி அட்டைகளை குறி வைத்து அடித்து ஜெயிக்கும் விளையாட்டு ஜமாவில் முழுப்பரிட்சை லீவில் பெங்களுரிலிருந்து தீப்பெட்டி அட்டைகள் பொறுக்கி வந்து, அலம்பும் ஒரு நண்பனை காலி செய்ய திட்டமிட்டு அண்ணனை கொஞ்சம் போல பொறுக்கி வரச்சொன்னேன். இதில் குறிப்பிடவேண்டிய ஒன்று அப்பா கொஞ்சம் ஸ்டிரிக்ட். இந்த தீப்பெட்டி அட்டை விளையாட்டு, கோலி மற்றும் பம்பரம் ஆகியவை என்கள் மூனு பேருக்கும் தடை செய்யப்பட்ட ஐட்டங்கள். காலில் செருப்பு அணியாமல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. அந்தக்காலத்தில் நான் ஒரு 'அயன் சூர்யா' மாதிரி மேற்படி பொருட்களை வீட்டுக்கு உள்ளும் புறமும் கடத்தியே விளையாடியதால், அந்தந்த விளையாட்டுகளில் விற்பனனாகவே முடியவில்லை. எதுவும் முடியாத பட்சத்தில் எங்கள் கடையிலிருந்து 10 கடை தள்ளி அமைந்திருந்த "செட்டியார் கடைக்குப்' போய் பத்மாக்கவையோ பிரேமாக்காவையோ கேட்டு 'அப்பாகிட்ட சொல்லிறாதீங்கக்கா' என்கிற அடிகோடிட்ட வேண்டுதலுடன் சிலபல சிகரெட் அட்டைகளை வாங்கிகொள்வேன். ஆக இந்த தீப்பெட்டி அட்டைகள் விளையாட்டில் மூலதனத்துக்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். தம்மாத்தூண்டு வயதிலிருந்தே கதைபுத்தகம் படித்தல், பள்ளி ஆண்டுவிழா நாடகங்களை மனப்பாடமாக சொல்லுதல் என்பது மதிரியான என் மற்ற சாதுர்யங்களுக்காகவும், நண்பர்களின் அம்மாவோ அக்காவோ "டேய் அவனையும் விளையாட்டில சேத்துக்குங்கடா" என்கிற சிறப்பு இடஒதுக்கீட்டிலும்தான் என் எக்ஸிடிரா கரிக்குலர் வாழ்கை ஓடியது. ரோட்டில் கிடக்கும் விஷயத்தை தொடுவதே பெரிய தப்பு என்கிற வளர்ப்பு நாங்கள்! இதில் கொஞ்சம் கூட தயங்காமல் என் சின்ன அண்ணனை தீப்பெட்டி பொறுக்கி வருமாறு விண்ணப்பித்தேன். எனக்கு 11 வயதிருக்கும், அந்த வயது எல்லோருக்கும் கடுமையான் ஆப்டிமிச பருவம் போலும்!

3 நாளைக்கு பிறகு அண்ணன் இந்தூரிலிருந்து திரும்பினார். நான் பாய்ந்து பாய்ந்து அவர் கொண்டு வந்த பையை சோதனை போட்டேன், அவர் என்னை விலக்கிவிட்டு, அவருடைய பெட்டிக்குள் சிலவற்றை பதுக்கினார். எனக்கு ரகசியமாக நான்கைந்து தீப்பெட்டி அட்டைகள் கொடுத்தார், அட்லிஸ்ட் ஒரு நூறு தீப்பெட்டி அட்டைகள் எதிபார்த்து காத்திருந்த நான் நொந்து நூடுல்ஸானேன். அதற்கு என் அண்ணன் "டேய் அந்த ஊருல யாரும் திப்பெட்டி அட்டை பொருக்கலடா" என்றார். என்னவோ எங்கள் ஊரில் மட்டும் தீப்பெட்டி அட்டை பொறுக்குவதே பலருக்கு தொழிலாய் இருப்பது மாதிரி.... சொன்னது கடுப்பாகிப் போனது.

செண்ட் வகையறா பற்றி கேள்வி கேட்ட போது "செண்ட்டெல்லாம் வெலை சீப்புதான், ஆன 2 தான் கிடைச்சது என்றார்" அதை நங்கள் மூன்று பேரும் மிக மிக குறைவாக பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஓட்டினோம். பாட்டில் தீர்கையில், கடைசியாய் அதை குலுக்கி, கவுத்தி கிடைக்கப்பெறும் செண்டின் உரிமையை அவரே தன் வீட்டொ பவர் மூலமாக எடுத்துக்கொண்டார்!

சின்னக்கண்ணான் மாமா இந்தூரில் சொந்த வீடெல்லாம் கட்டி, பிஸினஸ், மில் வேலை என அம்ர்க்கள்ப்படுத்தினார். 1950களில் என் அப்பா தன் 8 வயதிலிருந்தே வேலை பார்த்த கடையில், கொஞ்ச நாள் கழித்து வேலைக்கு சேர்ந்தவர் சின்னகண்ணான் மாமா, அனேகமாக என் அப்பாவுக்கு அப்போ 10 -12 வயதும், சின்னக்கண்ணான் மாமாவுக்கு 6-8 வயதுமிருந்திருக்கலாம். அந்தக்காலத்தில் எங்கள் கொசவம்பாளையமும் சுற்றுவட்டார ஊர்களிலும் விவசாயம் பட்டுப்போயிருந்தது. தவிர எங்கள் பரம்பரையில் குடும்பங்கள் ஒரு சராசரி அமைப்பை பெற்றுக்கொண்டிருந்த காலம், அரிசிச்சோறு அபூர்வம். பஞ்சம் முற்றி கற்றாழைச்செடியை தோண்டி அதன் வேரிலிருந்த கிழங்கை வேகவைத்து மக்கள் உயிர் வாழ்ந்த அற்புதமான காங்கிரஸ் ஆட்சி காலங்கள். அதில் கொஞ்சம் மிஸ்ஸாகி விஷக்கற்றாழை கிழங்கு தின்று இறந்தவர்களும் உண்டு.

சின்னக்கண்ணான் மாமா அப்பாவை விட வயதில் இளையவர். அப்பா மீது மிகவும் மரியாதையும் பாசமுமாக பேசுவார். சின்னக்கண்ணான் மாமா பற்றி ஒரு காமெடி கதையை அப்பா அவ்வப்போது சொல்வார். அவர்கள் வேலை பார்த்தது ஒரு பாத்திரக்கடையில். அப்போதெல்லாம் பாத்திரக்கடைகள் பெரும்பாலும் சந்தைகளிலும், திருவிழாக்களிலுமே பயணித்துக்கொண்டிருந்தது. சந்தை திருவிழாக்களற்ற மற்ற நேரங்களில் பல்லடத்துக்குள் கடை செயல் பட்டுக்கொண்டிருந்தது. முதலாளியின் குடும்பம் கடைக்கு பின்புறமிருந்த வீட்டிலிருந்தார்கள். வேலை பார்த்தவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு, வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கும் பையன்களுக்கு கடைக்குள் படுக்கை, என் அப்பா உள்ளூர், பொழுதானவுடன் கொசவம்பாளையத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். சின்னகண்ணான் மாமா கடையிலேயே தங்கினாராம். ஒரு முறை கடையில் வேலை பார்த்தவர்கள் தொடங்கி முதலாளி அம்மா, அவர்கள் குழந்தைகள் என அனைவருக்கும் தலையில் பேன் பிரச்சனை அதிகமாகி அவதியுற்றிருக்கிறார்கள். காரணம் கண்டுபிடிக்க முடியாமல் சிலகாலம் சொரிந்தும் சொரியாமலேயே ஓடியிருக்கிறது.

பிற்பாடு பேன்கள் மகப்பேறுக்கு சென்று குட்டி போட்டு மெட்டார்னிட்டி முடித்து, பிறந்த குட்டிகளுக்கு ஒரு ப்ரி-கேஜி கடிப்பயிற்சியும் கொடுத்து வந்த தீவிரவாத குடியிருப்பு சின்னக்கண்ணான் மாமாவின் பரட்டைதலைதான் என புலனாய்வுகுழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவு...ஒரு பெரிய பாம்பை அடிப்பதற்க்கான முஸ்தீபுகளுடன் நடவடிக்கை ஆரம்பம்! ஒரு பெரிய போராச் சாக்கு விரித்து அதன் மேல் நாவிதர் கை எட்டும் தூரத்திலிருந்தபடி சின்னக் கண்ணான் மாமாவுக்கு சிகைச்சேதம் செய்யப்பட்டதாம். அந்த முடிகள், விரிக்கப்பட்ட சாக்கு, அதுவரை சின்னக்கண்ணான் மாமா போட்டிருந்த சட்டை துணி அனைத்தும் உடனே கொளுத்தப்பட்டு, பேன் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டதாம். 3 மாதங்கள்.... மறுபடி காஷ்மீர் தீவிரவாதம் கணக்காய் மீண்டும் பேன், ஈறு பரவத்தொடங்க. இந்த முறை மாமவுக்கு ரெகுலராக 3 நாளைக்கு ஒருமுறையாவது குளிக்கும்படியும் ஒரு தற்காப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக அவருக்கு பேன்களின் பர்மிஸிபில் லிமிட் சீலிங் வைக்கப்பட்டதாம்.

அப்பா இந்த நிகழ்வுகளை சொல்லும்போது மாமாவும் சேர்ந்து சிரிப்பார். விட்டுப்போன விஷயங்களை எடுத்துக்கொடுப்பார். அவர்கள் இரண்டு பேரும் வேலை பார்த்த அந்த கடையில் இருவருக்கும் ஒரு மகனுக்கான் உரிமைகள் வழங்கப்பட்டிருதது. அப்பாவுக்கு திறன் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையிலும், மாமாவுக்கு அவருடைய எதிர்பார்ப்பேயில்லாத தன் முதலாளிகள் மேல் வைத்திருந்த அபரிமிதமான பாசம் காரணமாகவும்! ஆக இந்தூர் என்றால் எனக்கு சின்னக்கண்ணான் மாமாதான் நினைவில் வருவார்.

எனக்கு ப்ளாக்குக்குள் இப்படி ஒரு நோஸ்டால்ஜியாவில் கரைய வாய்ப்பு தந்த ப்ளாக்கர் தமிழ்பறவைக்கு நன்றி.

என் அப்பா இருந்தவரைக்கும் சின்னக்கண்ணான் மாமா வருடத்தில் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து செல்வார்.அவர் வந்து போகும் வரை சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. மாமாவைப் பார்த்து 12 வருடங்களாகிவிட்டன!!

Saturday, June 20, 2009

இன்னும் அவன் தரையிறங்கவில்லை

இந்தப்படம் எடுத்த வருடம் 1988. இடம்: டாப்ஸ்லிப். கேமரா ஒரு சாதரன யாஷிகா ஆட்டோபோகஸ் MF2 என்றொரு மாடல். சி.ஐ.டி பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்தபோது, டாப்ஸ்லிப் பற்றி கேள்விப்பட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலிருந்த காட்டிலாகா அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கி 8 நண்பர்கள் போனோம்! அந்நாளைய விலைவாசி, அதற்க்கொத்த பணப்பிரச்சிணை, எதையும் சட்டை செய்யாத இளமை, அந்தப்பயணம் இன்னமும் இளமையாய் மனசில்.

என் நண்பர்களுக்கு நானே ஆதர்ஷ போட்டோகிராபர். இந்தப்புகைப்படத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். ஆனாலும், கடந்த சில வருடங்களாக இந்த புகைப்படம் பார்க்கும்போதெல்லாம் என் திறமை குறித்த மகிழ்ச்சியை கடந்து மனம் இன்றைய ய்தார்தத்தில் நிலைகுத்திப்போகிறது. என் நண்பர்கள் சிலர் நான் புகைப்படம் எடுப்பதற்க்காக எங்கிருந்து குதிக்கச் சொன்னாலும் 1,2,3 சொல்லுடா என தயக்கமின்றி தயாராகி விடுவார்கள். இங்கே குதித்துக்கொண்டிருப்பவனும் அப்படியே!

டாப்ஸ்லிப்பில் யானை மேலமர்ந்து வனம் சுற்றிக்காட்டும் வழக்கமிருந்தது. அத்ற்கு பயன்படுத்தப்பட்ட உயரமான யானைகள் மீதேறும் ஏணி மேடை இது. நாங்கள் போனபோது அந்தப்பயிற்சி கைவிடப்பட்டிருந்தது! காட்டுக்குள் ஒரு ஒற்றைக்கொம்பன் நடமாட்டமே அப்போதைய தலைப்புச்செய்தி! அதாவது வேறொரு காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு மதம்பிடித்த ஆண் யானை. மற்ற யானைகள் அதை தங்கள் கூட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளாததால் கண்ணில் படும் பெண் யானைகள் மற்றும் மணிதர்களை தாக்கிகொண்டிருந்தது. தாக்குதல் எனில் மனிதனை கை வேறு, கால் வேறாக பிய்த்துப்போடுதல்! இந்த விவரம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் நங்கள் அனுமதியில்லாத காட்டுப்பகுதிக்குள் புகுந்து சுற்ற, வாட்ச் டவரிலிருந்து பார்த்த ஒரு ரேஞ்சர் அடித்து பிடித்து ஓடிவந்து எங்களை எச்சரித்து விரட்டினார். அதனால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் எங்களை சட்டைசெய்யாது படுத்துகொண்டிருந்த மான்களை போட்டோ எடுத்துகொண்டிருந்தேன். மான்களை மிக இயல்பாக போட்டோ எடுத்தவன் என்ற பெருமிதம், பிற்பாடு சென்னை வேளச்சேரியில் வாழ்ந்தபோது தெருநாய்க்கொப்பாக அலைந்த மான்களைக் கண்டு அடங்கிப்போனது.

அடிமரம் பெருத்த ஒரு மரத்தின் பெரிய கிளையில் எல்லா நண்பர்களும் உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். சாதாரனமாக மற்றவர்களை போட்டோவுக்காக அங்கிருந்து குதி, இங்கிருந்து குதி என்று சொல்லும் நான், அந்தக் கிளையில் ஏற பயந்து நடுங்கி, ஒரு பல்லி கணக்காய் அந்த கிளையில் ஒட்டிகொண்டிருக்கும் போட்டோவை, ஒரு நண்பன் என்னை ப்ளாக்மெய்ல் செய்வதற்க்காக பத்திரப்படுத்திவைத்திருக்கிறான். அங்கே காட்டின் எல்லைப்பரப்பிலிருந்த காட்டிலாகா அலுவலகம் அருகேயிருந்த மேட்டில் இந்த மேடையிலிருந்து குதிக்கும் போட்டோ முயற்சி நடந்தது. உயரத்தை அதிகமாக காட்ட எண்ணி கேமராவை கீழே கொண்டுபோனதை விட, குதித்த நண்பனை உயரம் தண்டுவது மாதிரி பம்ப் செய்து குதிக்க சொன்னேன். அவன் அதற்ககெல்லாம் அஞ்சியவனில்லை! ஒரே டேக், நல்ல அவுட்புட்! சிரமப்பட்டு குதித்தவனைவிட சரியான வினாடியில் கிளிக்கிய எனக்கு ஏராள பாரட்டு!


21 வருடங்களுக்கு பிறகு.....2009ல்.......அந்தப்புகைப்படத்தில் உள்ளவர்களில் மேடையில் நிற்ப்பவர்களில் ஒருவர், ஆஸ்திரேலியாவிலும் ஜெரிமனியிலும் பறந்து பறந்து வேலை செய்கிறார். மற்றொருவர் கரூரில் ஒரு தொழிலதிபர். மூன்றாமவர் காங்கயம் அருகே விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவர், சிலகாலம் பனியன் கம்பேனியெல்லாம் வைத்திருந்தார்.

அந்த குதிக்கும் நண்பன்.......... அவன் கடும் உழைப்பாளி, வேலைக்குப்போனான், சொந்தத்தொழில் செய்தான். இப்போது மீண்டும் வேலைக்கு போகிறான்! நான் இன்னும் பார்வையாளனாகவும், பதிவு செய்பவனாகவும் தொடர்கிறேன்.

அவனை நினைக்குபொழுதெல்லாம் எனக்கு நினைவில் வரும் முதல் ஞாபகம்..... ஹாஸ்டலில் தங்கிப்படித்தவர்களில் அவன்தான் அதிகமான பள்ளியிறுதி மதிப்பெண் வாங்கி வந்தவன். ஆனால் முடிவில் என்னை மாதிரியே பல அரியர்ஸ்களுடன் வெளியேறியவன். நான் போராடி அரியர்ஸ் முடித்து மேலே கொஞ்சம் படித்தேன். அவன் அரியர்ஸ் தேறவில்லை என ஞாபகம். அவனுடைய அன்றைய காதலும் கூட.....!

Thursday, June 18, 2009

நள்ளிரவில் நிக்ழ்ந்த ஆடை அவிழ்ப்புகள்



ஏவலோ
செய்விணையோ,
சுழலும்
மின்விசிறியில்
காற்று
வருவதில்லை!!

* * *

வாங்கிவைத்த
குளிர்பானங்களையெல்லாம்
குட்டிசாத்தான்களே
குடித்து
முடித்து விடுகின்றன!!

* * *

உள்ளாடை
மேலாடை
தவிர்த்து
இடுப்பாடையுடன்
அலைகிறேன்
மனநோயோ??

* * *

விய்ர்த்தலுத்த என்
பகல் குளியலின் போது
மேல்தொட்டியில்
கொதிக்கும்
வெந்நீரை
ஊற்றியனுப்பும்
மாடி வீட்டுக்காரனை
ஆள் வைத்து அடிக்க
ரொம்ப நாளாய் திட்டம்!!!

* * *

நள்ளிரவில்
முன்பெல்லாம்
நிகழ்ந்த
ஆடை அவிழ்ப்புகளுக்கு
பதிலாய்
குளிர் காற்று
ஜில் தண்ணீருடன்
பிசுக்கற்ற தூக்கமும்
கனவை நிறைக்கிறது!!

* * *

கருமம் பிடித்த
கோடையின்
நீள்ச்சி
சென்னை முழுக்கவா
யழவு
எனக்கு மட்டும்தானா?
------------------

Friday, June 12, 2009

நல்ல வேளை.........





என் பழைய புகைப்பட தொகுப்பிலிருந்து
ஊர்: டெல்லி
இடம்: மகாத்மா காந்தி சமாதி
வருடம்: 1996
கேமரா: நிக்கான் FM10
ஒளி: ஒரு மழைக்கால முற்பகல்
அப்போ மனநிலை: அமைதியும் கொஞ்சம் பெருமையும்
இப்போ: ...........

Thursday, June 11, 2009

தாங்க முடியாத வலி என்பவனை அடி!


இந்த பதங்கள் நமக்கு புதிதில்லை!

"வலி தாள முடியலே"

"தாங்க முடியாத மனவேதனை"

"ரொம்ப சந்தோஷம், மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரல"

இவை படு டுபாக்கூர் ஸ்டேட்மண்ட்கள், திருத்தப்படவேண்டும்!!

வலி என்பதற்க்கு அளக்கும் கருவிகளும் வந்து விட்ட நிலையில், என்னால் தாளமுடியாத வலி என்பவர்கள் குறையவில்லை!

இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகள் நம் நாவு புரிந்து கொள்ளும். அது மூளை வழியாக அனுப்பும் சிக்னல்களை வைத்து அனுபவமாய் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறோம்

அப்படி தாள முடியாத வலிக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படுகிறது. இல்லை, இப்படி ஒரு வார்த்தை உருவாக காரணம் என்ன? மூளை தனக்கு வரும் சிக்னலை, அது எவ்வளவு அளவில் குறைவானதாக இருந்தாலும்கூட மூளை கிரகித்துக்கொள்ளும்.

அப்படி நுட்பமான ஆற்றல் படைத்த மூளை, ஏன் தாளமுடியாத வேதனை என்கிற ஒரு அனுபவத்தை வெளியிடுகிறது? நெருப்பு சுட்ட மாதிரி, பாறாங்கல்லை தலையில் போட்ட மாதிரி என்கிற உவமைகளோடு சொல்லப்படும் அனுபவ வார்த்தைகள் சொல்லாததை இந்த "தாள முடியாத வலி / தாங்க முடியாத மனவேதனை" போன்ற வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியுமா?

அதாவது ஹைவே சாலைகள் எனப்படும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே Weigh Bridges எனப்படும் எடை சரி பார்க்கும் மையங்களில் பிரமாண்டமான எடை மெஷின்கள் இருக்கும். அங்கே உள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்சம் அங்கே எவ்வளவு எடை பார்க்கமுடியும் என குறிப்பிடபட்டிருக்கும். அதைவிட அதிகமான எடையுள்ள பொருட்களை அங்குள்ள கருவியால் அளக்க முடியாது!

அதுபோல மணிதனின் மூளையாகப்பட்டது உணர்வுகளை அளக்கும் திறனை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே கொண்டிருக்கிறது. அந்த அளவு மீறும்போது மணித மூளையால் அல்லது மனத்தால் அப்பொழுது உள்ளே நிகழும் சமாச்சாரங்கள பதிவு செய்யமுடியாமல் தினறி, குழம்ம்பி ஆன்ந்தத்தில் கண்ணீர், துக்கத்தில் வெடிசிரிப்பு என மெஷின் தடுமாறுகிறது. அந்த சில நொடிகளில் ஒரு மனமற்ற நிலை எற்படுகிறது. அதாவது ஓஷோ சொல்கிற மனமற்ற நிலை! அவர் அதை கலவியின் உச்சத்தில் சில வினாடிகளிலுக்கு மட்டும் அந்த மனமற்ற நிலை நமக்கு கிடைப்பதாகவும் அது ஒரு மாபெரும் பேரின்பம்! அதை, அந்த மனமற்ற நிலை, நமக்கு நீண்டநேரம் கிடைக்க தியானம் மட்டுமே உதவுவதாகவும் சொல்கிறார்.

இந்த தாளமுடியாத சந்தோஷ துக்கங்களும் கூட மனமற்ற நிலையை உருவாக்குகிறது, மூளையால் அளக்க முடியாத உணர்வுகளனைத்துமே பேரின்பத்தை அதாவது மனமற்ற நிலையை உருவாக்க வல்லவை. அதன் காரணமே மணிதன் சில அனுபவங்களின் முடிவில் தடாலென துறவு பூனுவது, சாமியாராவது, ஏன் ஞானமடைவது போன்றவை நிகழ்கின்றன! போதிமரம் வெறும் நிகழ்விடம் மட்டுமே! நிகழ்ந்த பின் அந்த அதிர்வுகளே, அவ்விடத்தின் சிறப்பாகிறது. அதே சமயம் தி்டீர் தற்கொலைகள் என்பவை மனசுக்குள் தெளிவாக தர்க்கம் செய்து மூளையின் உதவியோடு Mode Of Operationஐ திட்டமிட்டு செயல்படுவது. அங்கே மூளை முண்ணனியில் உள்ளது.

ஆனால், முளை அதாவது மனம் தாண்டிய அனுபங்கள் அணைத்துமே, அது மகிழ்ச்சி, துக்கம், வலி எதுவாயினம் ஒரு மனமற்ற நிலையை கொண்டுவருவது ஞானமார்க்கத்திற்க்கான அவ்வப்போது வரும் பஸ்ஸ்டாப்பே! படக்கென அங்கே ஸ்டாப்பிங்கில் இறங்குபவன் ஞானி. தொடர்ந்து மூளை செயல்பட காத்திருப்பவனுக்கு அது ஒரு அனுபவம், அற்புத அனுபவம்...... கலவி அனுபவம்! ரொம்ப வலிச்சா, இனிமே சந்தோஷப்படுங்கோ!

விண்ணில் ஏறீ கதவை தட்டுங்கள்!!

உற்சாகமாய் கைகளை
உயரே வீசுங்கள்...

உங்கள் விரல்கள்
விண்ணைத் தொடலாம்!

அதையும் தட்டிப்பாருங்கள்
அங்கொரு வாசல் திறக்கலாம்!

உரக்கக் குரல் கொடுங்கள்.
உள்ளே நல்மனிதர் இருக்கலாம்!

கூசாது கேளுங்கள்
கேட்டது கிடைக்கலாம்!

தளரா முயற்சி ஒன்றே
தற்(எ)ப்போதும் வேதம்!!

Wednesday, June 10, 2009

ஒரு "துவம்" இல்லா கவிதையும் அதன் பின்னூட்டமும்

ஒரு கதவு
அடைத்தால்
மற்றொன்று
திறக்கும்!
கரெக்ட்டுதான்!

வீடேயில்லாதவனுக்கு???
-நானு

பின்னூட்டம் -அதுவும் நானே

போடா
போய் பிச்சையெடு!
சோறில்லையென
ஒரு கதவு அடைக்கும்!
பழையது உண்டென
மற்றொன்று திறக்கும்!

நானு: ச்சே என்ன கேவலமான கற்பனை

(எழுதி அழித்துச்செல்லும் விதியின் கரங்கள் மாதிரி ரண்டு நாளா மனசுக்குள் வந்து வந்து போன எழுத்துக்கள்)

முந்தானைகள் ஓய்ந்துபோகும்

உயரே
பெரிய
சிறகடித்து
சிறிய
இமை விரித்து
உற்றுத்தேடும்
பருந்துக்கண்கள்

ஓடிப்பாய்ந்து
சிறகில்
போர்த்தியும்
குஞ்சை இழக்கும்
தாய்க்கோழி

பஸ்ஸில்
தடவித் தடவி
படர்ந்துபோகும்
மணிதகண்ணிலின்று
ஒளித்தும்
மறைத்தும்
ஒய்ந்துபோகும்
சேலைத்தலைப்புகள்

Sunday, June 7, 2009

காமரூப பிறை நிலவு


கடந்த நிறுத்தத்தில்
அவள்
இறங்கிய பின்னும்
முன்னிருக்கை கம்பியுடன்
தொடர்கிறது
வெள்ளைத்தோல்
பிறைமுதுகு

வயசுப் பெண்ணின் இடுப்பு

முந்தாநாள்
திங்கட்கிழமை
மேடும் குழியாய்
நடுங்கி ஓடிய
இதே பஸ்ஸில்
நெருக்கி இறுக்கும்
மனிதருக்குள்ளே
ச்சே ... என்ன பிழைப்பு
என்ற மனசுக்கு - இப்போ
இடுப்பு உரசும்
வயசுப்பெண்ணை
ஒதுங்கச்சொல்ல
ஆசையில்லை!

Saturday, June 6, 2009

காதல் கம்மியா, சமூகம் அதிகமா, கவிதை எழுதட்டுமா??

உண்மையா சொன்னா, தீர்மானமா ப்ளாக்க விட்டு ஓடிப்போயிராம்லுன்னுதான், நெசமாவே அந்த போஸ்ட்டே நான் எழுதினது! வழக்கம் போல ஒருத்தர் கூட நம்மள கவணிக்க போறதில்ல! இந்த தமிழ் ப்ளாக்குக மத்தில இப்பிடி ஒரு ஒட்டு ஒறவு இல்லாம போறமேன்னு வெசனந்தான்! அப்பிடியே மனசுலர்ந்ததஅடிச்சு போஸ்ட் பண்ணிட்டு கிளம்பிட்டேன்! போற வழில ஒரு ஞாபகம், அடடா போறதுன்னு ஆகிப்போச்சு, கடைசி கடைசியா மணுசனுக்கு மணுசன் நேசிக்கறதப் பத்தி ஒரு கவிதை முன்னொரு காலத்துல எழுதுனது, அத உள்ள போட்டுட்டு போயிடலாமுன்னு திரும்பி வந்து ப்ளாக்க திறந்தா.... அடடா அடடா ரண்டு மூனு பேரு பிண்ணூட்டம் போட்டிருக்கறாங்க! அதுவும் என்னன்னு, நல்லாத்தான எழுதறீங்க, தொடர்ந்து எழுதுங்க, படிக்கறோம்னு ஒருத்தரு! ஈழத்தோட நிலைமை உனக்கு என்ன புரிஞ்சுதோ அவ்வளவுதான் எங்களுக்கும் புரிஞ்சுது, இதுக்காகவா ப்ளாக்க விடு ஓடறதுன்னு இன்னொருத்தரு! அதுல கடைசியா ஒருத்தரு, நான் பேரு சொல்லமாட்டேன், ஆனா நீ அன்னைக்கு ஜ்யோவ்ராம் சுந்தருக்கு போட்ட பிண்ணூட்டத்தை பார்த்துட்டு வந்து உன்னோட ப்ளாக பாத்தேன். த்மிழ்மணத்துலயும் பார்த்தேன்னு சொல்லி, அது போனா போகுது தொடர்ந்து எழுதுன்னு சொல்லியிருந்தாரு!

ஒரு நிமிஷம் மனசுக்குள்ள மறுபடியும் கைபுள்ள ஆயிட்டமான்னு யோசனை! ஆனா, முகந்தெரியாம, எவனோ வெசனத்தோட போறான் பாவம், கொஞ்சம் உற்சாகப்படுத்தலாமுன்னு இத்தனை பேரு சொல்லும் போது அவங்க வார்த்தைக்கு மதிப்பு குடுக்கனும்னு தோனுச்சு! கையோட நம்ம கவிதைய பதிச்சுட்டேன்! யாருமே பிண்ணூட்டம் போடல, புடிக்கலயாட்ட இருக்குது! கோவையில் நடந்த சர்வமத நல்லிணக்க இளைஞர் பயிற்சி முகாம்ல இறுதிநாள் அன்று நான் எழுதிய இந்த கவிதைய ரெம்ப பாராட்டினாங்க!

பரவால்ல ஒருத்தருக்கு புடிச்சது, இங்க ப்ளாக்ல புடிக்கும்னு சொல்லமுடியாதே! எது எப்படியோ! நான் போறேன்னப்போ, போகாதே, நல்லாத்தான் எழுதற, இன்னும் எழுதுன்னு நீங்க சொன்னத நான் கேட்டுக்கறேன். சரிங்க, நான் போகல! நான் அப்பப்ப கவிதை எழுதட்டுமா? காதல் கம்மியா, சமூகம் அதிகமா, கவிதை எழுதட்டும??

Friday, June 5, 2009

நானும் - நீயும்

நானும் நீயும்
நேசிக்கலாமே

நீயென்னவோ
ஆர்டிக் பிரதேசத்து
பனிக்கரடியாயினும்
நானென்வோ
பாலைவனத்து
வறட்சிப் பறவையாயினும்
தேசங்கள் பேதமின்றி
பூமத்திய ரேகையின்
இருபக்கத்திலும் செழித்த
நேசத்தில் வசிக்கலாமே!
-*-*-*--*
நீ
மேல்சாதித் தெருவின்
ஆச்சார பூனைக்குட்டியாயினும்
நான்
கீழ்சாதிச் சேரியின்
அழுக்குப் பன்றிக்குட்டியாயினும்
வயலைப் போல
சாக்கடையிலும் விளையும்
பசும் புற்க்களைப் போல
நானும் நீயும்
அன்பு விளைவிக்கலாமே!!
--------*************-----

நிகழ்காலத்தில் நின்று
எதிகாலத்தை கணிக்கும் நீ
நாகரீகவாசியாயினும்....
நான்
நூற்றாண்டுகள் மறந்த
ஆதிவாசியாயினும்
காலங்களுக்கு அப்பாற்பட்ட
அன்பை பகிர்ந்து கொள்ளலாமே!!
------------**************--------

கல்லறக்கு காத்திருக்கும்
கிழடாய் நானும்
கருவற அனுப்பிய
குழந்தையாய் நீயும்
இருந்தாலென்ன?
மணிதர்களுக்குப்
பொதுவான அன்பை
பண்ட மாற்றிக்கொள்ளலாமே!
-------------***********-------

புறம் பூண்டு வந்தது
நிர்வாணம்
அகம் பூண்டு வந்தது
பேரன்பு
அவற்றை
மறைக்கவும்
அவிழ்க்கவும்
ஓயாமல் நாமுண்ணும்
பாவக்கனிகள்!
---********-------

மணிதர்கள்
எல்லோரும்
ஏராள அன்பு படைத்த
செல்வந்த்ர்கள்
வாயேன் நாம்
வெறுமனே
நேசிக்கலாம்!!

நீங்க யாரும் வான்னு கூப்பிடல, அதனால போறேன்!

நீங்க யாரும் வான்னு கூப்பிடல, அதனால போறேன்!

என்னோட ப்ளாக்க சுருட்டி கட்டிகிட்டு ராத்திரியோட ராத்திரியாவோ, இல்ல பகலோட பகலாவோ ஏரியாவ வீட்டே ஓடிப்போயி பழையபடி இணையத்துல மேயற வேலைய மட்டும் செய்யலாமான்னு யோசிக்கிறேன்.

சொந்தமா ப்ளாக் தொடங்கற வரைக்கும் மனசுக்குள்ள என்னோட நினைப்பு என்னன்னா, நாம மட்டும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா பல பேருக்கு பொழப்பு போயிடும்! மொத்த தமிழ் உலகமே நம்மை மட்டுமே பாக்கும், அப்புறமா பயங்கற பேமஸ் ஆயிடுவோம்! ரோட்ல, நெட்டுல நடக்க முடியாது! எல்லாரும் ஆட்டோகிராப் கேப்பாங்க! இப்பிடி பயங்கர கணா!

இப்பிடி ஒரு நெணப்ப, கணாவ வருஷக்கணக்கா மனசோட வச்சிருந்தவரைக்கும் பிரச்சணையில்ல. அதை சிலர் கிட்ட பேசினப்பதான், வந்திச்சு விபத்து! அட ஆமாங்க கரெக்ட், எவனெவனோ எழுதறான், அதுவும் கண்டதயெல்லாம் எழுதறான். உங்கள மாதிரி வாசிக்கற வழக்கம் உள்ளவங்க எழுதுனா ரொம்ப பிரமாதமா, ரொம்ப நல்லாயிருக்குமேன்னு அவங்க பேச பேச, நான் கைப்புள்ள ஆகிட்டேயிருக்கறேங்கற உண்மை நிலவரம் தெரியாம, புது தெம்போட ப்ளாக்கில் பேமஸாகிற கனவு பிருமாண்டமா விரிஞ்சுது! இதுல இன்னொரு பிரச்சணை என்னன்னா, எனக்கு கடுமையான வல்லின, மெல்லின மற்றும் கமா, புல்ஸ்டாப் த்கராறு. படிச்சது இங்கிலீசு பள்ளிக்கூடம், அங்க நாந்தான் தமிழ்ல முதல் மார்க் அதாவது 60லிருந்து 70. அங்க தப்பிச்சுட்டேன்! பிற்பாடு கையெழுத்து பத்திரிக்கை நடத்துனப்ப, என் ஆர்வத்த பார்த்துட்டு நண்பர்கள் தொலையுது போன்னு நம்ம எழுத்துல இருந்த பிழைகள திருத்திட்டாங்க! அதுக்கப்புறம் சன் டிவில நிகழ்ச்சிகள் இயக்குனப்ப கிறுக்கலாவே ஸ்கிரிப்ப்ட் எழுதி 4 வருஷம் ஓட்டியாச்சு! அங்க பெரிசா யாரு கையிலேயும் ஸ்கிரிப்ட கொடுக்கற வழக்கமில்ல! கான்செப்ட்னு இங்கிலீஷுல எழுதி துறை தலைவர்கள்கிட்ட கொடுப்போம்! எனக்கு அங்கே தமிழ் தகராறு வந்த இடம் - நான் இயக்கிய "நம்மநேரம்" நிகழ்ச்சி. அதுல விக்கியின் பாட்டு மச்சி பாடுன்னு ஒரு பகுதில பாட்டு டிவில ஓடும்போது அதுக்கு மேல் இந்த பாட்டாகப்பட்டது இந்த இடத்துல, இத்தன ரூவா செலவுல, இப்பிடி இப்பிடி இன்ன மாதிரி தயாரிக்கப்பட்டதுன்னு எழுத்து ஓடும். வீடியோ எடிட்டர தாஜா செய்யவும், எழுதும் போது வரும் கற்பணைகளை சேர்க்கவும் நானே அதை வாரா வாரம் டைப் அடிப்பேன். அதுல நான் செய்யற இலக்கண தவறுகளை தூரன் கந்தசாமி அவர்கள்தான் திருத்துவார். "இந்தியத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக" அப்பிடின்னு சன் டிவில ஒரு குரல் அப்பப்ப முழங்குமே அது இந்த தூரன் கந்தசாமி அவர்கள்தான். அவரு யாருன்னா பிரபல மறைந்த பெரியசாமி தூரன் அவர்களின் பேரன். இந்த தூரன் கந்தசாமி என்பவர் சன் டிவில Post Production துறையின் தலைவர். இப்போ அதவிட பெரிய போஸ்ட்ல இருக்கார். நான் சொல்றது நான் அங்கு பணிபுரிந்த 1999 - 2002 காலகட்டம். தூரன் ஐயா வராத நாட்களில் நல்ல தமிழ் தெரிந்த நண்பர்கள் திருத்துவார்கள். சில நேரம் நான் வேலையை முடிக்க நள்ளிரவோ மறுநாள் காலையோ ஆகும் போது, இலக்கன பிழை திருத்த ஆள் கிடைக்காது! அவ்வளவு தாமதமானதில் என் எடிட்டர் நண்பரும் ஒரளவுக்கு, அதாவது என்னை கொலை செய்யும் அளவுக்கு என் மேல் பாசமாக இருப்பார். அந்த மாதிரி நேரங்களில், மேற்படி நிகழ்ச்சியிலேயே முதலில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துவிடுவேன், அதில் " விக்கி நிகழ்ச்சியில் வரும் தகவல்கள் தமிழ் எண்கணித அடிபடையில் (Tamil Numerology) அமைக்கப்பட்டவையாகும் - தவிர அது இலக்கண பிழைகள் அல்ல" என்று போட்டுவிடுவேன். நகைசுவை நிகழ்ச்சி என்பதால் நான் இப்படி என் தமிழால் பிழைப்பு(?) நடத்திக்கொண்டிருந்தேன். என்ன ஒரு அயோக்கியத்தனம் இல்ல?

இப்ப ப்ளாக் எழுதனும்னு முடிவு பண்ணியாச்சு! எனக்கு என் தமிழரிவு லட்சணம் தெரியும். முடிஞ்சளவு தள்ளிப்போட்டேன். பல ப்ளாக்குள படிச்சுட்டு பின்னூட்டம்(பிண்ணூட்டமா?) போட்டேன்! யாரும் என் பின்ணூட்டத் தமிழ் பற்றி கண்டுகிட்டதா தெரியல!அப்பிடியே தைரியம் பிக்கப் ஆகி முடிவு எடுக்கையில, கிணறு ஆழம் பாக்க ஊரான் ஊட்டு பிள்ளைய இறக்கிவிட்ட கதையா, நண்பர் செந்தில் குமரன உசுப்பி, பிளாக் எழுதுங்க செந்தில், அட்சென்ஸ்ல காசு தருவாங்க, ப்ளாக்க பாக்கறவங்கல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி எழுந்து நின்னு கை தட்டுவங்கன்னு பல பிட்டுகள போட்டு அவரும் susenthilkumaran.blogspot.com னு ஆரம்பிச்சிட்டாரு. அவரு ஏதோ ஒன்னு ரண்டு எழுதுவாருன்னுதான் எதிபார்த்தேன். மனுசனா அந்தாளு! எழுதறரு எழுதறாரு அப்பிடி ஒரு நடை, கருத்து! எனக்கு வேர்த்து போச்சு! அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு, அவரு முன்னாள் விகடன் மாணவ நிருபர், இடையில சன் டிவி, இந்நாள் தேவி, தமிழக அரசியல்னு வெளுத்து வாங்கற பார்ட்டி, நல்ல தமிழ் தெரிஞ்ச ஆளு! அதுசரி அவர தமிழுக்காகவா இறக்கிவிட்டோம்! ப்ளாக்குகல்லவா இறக்கினோம், ப்ராஜக்ட் சக்சஸ்!!

ஆனாலும் என்னோட டார்கெட் என்னன்னா, ப்ளாக்ல ஏதாச்சும் பெரிசா, பயங்கரமா, வித்தியாசமா எழுதி கலக்கிடனும்! ஆனா.... ப்ளாக்க ஆரம்பிச்சு மேட்டர அடிக்க ஆரம்பிச்சா..... மனசு முழுக்க டோட்டல் blank! ஒரு வேளை writer's blockஓன்னு ஒரு டவுட்! அது writerக்குதானே வரனும்? அப்புறம்தான் புரிஞ்சுது, நான் பொதுவா தமிழ் ப்ளாக்குகள்ல செல்வேந்திரன்ல தொடங்கினா, லக்கிலுக், பரிசல்காரன், கேபிள்காரன்னு டோண்டுவரைக்கும் ஒரு ரவுண்டு வருவேன், தமிழ்மணம் சுட்டி அத்தனையும் கிளிக் செய்து படிப்பேன், ஆனா அதுதா பிரச்சணைன்னு தெரிஞ்சுது! அத்தாம்பெரிய ஆளுகளையும், அவங்க போடற கருத்து, கொள்கை சண்டைகளப்பார்த்து என் மனசு கலக்கமாயிடுது! ஓகே ஓகே, மாத்தி யோசி!!

இதுல அப்பப்ப பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம்னு ஒரு விஷயம் அடிபடுது! அது என்னன்னே எனக்கு தெரியாது! செந்தில்கிட்ட கேட்டா நவினத்துவம் வந்ததுகப்புறம் வந்ததுதான் பின்நவினத்துவம்னு சொன்னாரு! நல்ல விளக்கமுங்க! நானும் யோசிச்சேன், ஆனாலும் என்னதான் நண்பருன்னாலும் செந்தில் மாதிரி ஒரு போட்டி எழுத்தாளர்கிட்ட போய் விளக்கம் கேட்டது நம்ம தப்புன்னு புரிஞ்சுது. யாராவது நல்ல தமிழ் வாத்தியாரா போய் கேக்கலாமுன்னு முடிவு எடுத்து... மாத்திகிட்டேன்.

முன்காலத்துல நான் சாருவோட கோணல் பக்கங்கள் முதல் பாகம் படிச்சுட்டு அவருக்கு அனு(ணு)க்கனா மாறி சுத்திக்கிட்டிருந்தவன், கோ. ப - 2 படிச்சேன், லைட்டா சுத்துச்சு! இப்போ சமிபத்துல ஃபேன்ஸி பனியனும் எக்ஸ்டென்ஷியலிஸமும் (கரெக்டா சொல்றனா) படிச்சேன், நல்லாவே சுத்துச்சு! மன்னிப்பு கேட்டுட்டு புஸ்தகத்த மரியாதையா கீழ வச்சுட்டேன். ஏன்னா பலபேரு அவர பாராட்டி கொண்டாடும்போது, எனக்கு புரியலேங்கறதுக்காக தப்பு சொல்லக்கூடாது. இதுல வேற இங்க ப்ளாக்குகள்ல இவர மையமா வச்சு கடுமையா சண்டை போடுறாங்க!

National School Of Drama Workshopகள்ல நிறைய கலந்துகிட்டு, அதுவும் கேரளா காவாளம் நாராயண பனிக்கர் வழி வந்த வகையறக்கள் கூடயெல்லாம் நாடக பயிற்சிப்பட்டறையில கலந்துகிட்டப்போ Symbolism, Post Modernismகறதல்லாம் ஒரு வகையான வெளிப்பாட்டு நுட்பங்கறத தாண்டி ஒன்னும் சொல்லல. அது சொல்லறவன் கேக்கறவன் ரண்டு பேருக்கும் தெரியனும் அப்பதான் முழுமையான interpretation, அதாவது புரிதல் வரும், அப்பதான் அதன் அடுத்த தளத்துக்கு போலாம்னு சொல்லிக்கொடுத்தாங்க! சத்தியமா இத தாண்டி இந்த சமாச்சாரம் எனக்கு புரியல, தெரியல.

அதுக்கப்புறம் இலங்கைல விடுதலைபுலி தலைவர் திரு.பிரபாகரன் மரணமும், அதை பெரிசா காட்டிட்டு பல ஆயிரம் தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாம கொண்ணு போட்டாங்க! எது எப்படியோ, செத்து போயிட்டங்க! இழவு விழுந்திருச்சு! உலகத்துலயே கேள்வி கேக்க நாதியில்லாத இனமா தமிழர்களாகிய நாம ஆயிட்டோமே! இதுக்கு ஒரு பெரிய எதிர் விணை(ன) யில்லன்னா, நாளைக்கு எல்லாப்பக்கமும் இருக்கற தமிழனுக்கும், ஏன் தமிழ்நாட்டுல இருக்கற தமிழனுக்கும் இந்த முடிவு ஏன் வராதுன்னு என்னோட யோசனை. ஆனா, இங்க என்னடானா இது கரெக்ட், அவரு சாகத்தான் வேனும்! எத்தனை பேரு இவரால செத்தாங்கன்னு ஒரே விவாதம்! இந்த கேப்ல ஒருத்தரு சுபாஷ் சந்திர போஸோட பிரபாகரன ஒப்பிடப்போயி, இன்னொருத்தரு போஸே தப்பு இவரு என்ன பெரிசான்னு கேக்கறாரு! மகாத்மா காந்திய கூட திட்டியிருக்கற பதிவு ஒன்னு பார்த்தேன்! திட்டுன்னா வெறும் திட்டு இல்ல! பயங்கர லாஜிக்கோட வார்த்தைகளை பதிவு செய்திருந்தாங்க! எனக்கா ரொம்ப விசனம், நண்பர்கள் அனுப்பற வீடியோ இணைப்புகள்ல நம்ம தமிழன் ரோட்ல அடிபட்ட நாயா கூடாரங்கள்ல கிடக்கறான்! நம்மாளுக பெரியவங்க, சின்னவங்க சோத்துக்கு வரிசையில நிக்கறாங்க! இந்த வரிசையும் பிணங்களும் குஜராத் நிலநடுக்கத்தப்போ, பீகார் வெள்ளத்தப்போ, நம்ம ஊரு சுனாமி காலகட்டத்துல எல்லாரும் பாத்ததுதான்! அது இயற்கை சீற்றம், அதுவும் தற்கலிகமானது! அனா இங்கே....முழு காலும் துண்டாகி சாகாம உயிரோட ஒரு சின்ன பையன் கதறிகிட்டுருக்கறான், நம்ம தமிழ் பொண்ணு ஒன்னு கர்ப்ப வயிறு கிழிஞ்சு உள்ள இருக்கற குழந்தை கையி மட்டும் வெளிய வந்துருக்கு! இன்னும் என்னன்னமோ! ஆனா இங்க என்னடான்னா இணையத்துல சண்டை நடக்குது, பத்திரிக்கைகள்ல புது ரஜினி படத்துக்கு போடறமாதிரிதான் செய்தி அளவுகள் இருந்துச்சு! அட நம்ம இனம் அங்க கொத்து கொத்த செத்து கிடக்கறங்க, அதுக்கு இவ்வளவுதான் நம்மோட ரியேக்ஷ்னா?

இப்போ அதெல்லாம் முடிஞ்சு போச்சு! புது எலக்சன் விஷயங்கள் பேசறாங்க!

திடீர்னு இலங்கைல ஆன மாதிரி இங்க தமிழ்நாட்டுலயும் நம்மளயெல்லாம் போட்டு கொன்னாங்கன்னா, நாமளும் இப்பிடித்தானே நாதியத்து கெடப்போம்? கருமம், இந்த நினைப்புலர்ந்து வெளிய வரவே முடியல! நேத்து பேஸ் புக்ல ஒரு இலங்கைதமிழ் இளைஞன் chatல வரான். மனசே பகிருங்குது! ஏண்டா நீயே அகதியாட்டமா இருக்கற, உனக்கேது இண்டர்நெட்னு ஒரமா ஒரு கேள்வி வருது! எழவு, நாம இலங்கைய பாத்தமா, அங்க பங்கர் குழி எப்பிடியிருக்குமுன்னு தெரியுமா, ஷெல் அடிக்கறதுன்னா என்ன? கிளஸ்டர் குண்டு கண்டமா? பொட்டி படுக்கைய தூக்கிட்டு கால் நடையா ஒடியிருக்கமா? என்ன தெரியும்? அதெல்லாம் பரவால்ல, இன்னைக்கு, இப்போ அவங்க நிலைமைதான் என்னன்னு நமக்கு பெரிசா தெரியும்? ஆனா இந்த கோணகேள்வி மட்டும் மனசுக்குள்ள டக் டக்னு வருது! அந்த தம்பி சொல்றான், அவனோட அம்மாவ பாத்து 5 வருஷ்மாச்சாம், குரல கேட்டு 2 வருஷத்துக்கு மேல ஆச்சாம்! எங்க கதிய பாத்தீங்களா அண்ணேங்கறான். பல விவரங்கள் சொல்றான். மானிட்டர் முன்னாடி அழுதுகிட்டு உக்கார்ந்துட்டிருக்கேன். சகதமிழர்கள் சாகிறத செய்தியா கேட்டுகிட்டு மானக்கெட்டுபோய் இங்கே அன்றாடம் பொருள் தேடும் வாழ்கையில கிடக்கிறம்பா, என்னைப்போல அளுக்கும் ஈழத்துக்கும் இடைல இருக்கறது கடலா, பயமா, சுயநலமான்னு தெரியலய்யான்னு சொல்றேன். எதையும் யோசியாதையுங்கோன்னு பதில் சொல்லறான் அந்த தம்பி. நானும் என்னைப்போன்ற இளைஞர்களும் சீவிச்சிருப்பமோ மாட்டமோ, நிலைமை சீரானவிட்டு ஒரு நடை வந்துட்டு எங்கட மண்ணுக்கு வந்துட்டு போவியளான்னுகேக்கறான்! என்னால தாங்க முடியல! எனக்கு நேரம் முடிஞ்சுட்டது, பிறகு பார்ப்பம்ன்னு லாகவுட் செய்துட்டு போயிட்டான். எனக்கு பலநேரம் முத்துகுமார் ஞாபகம் வருது! அவனும் தமிழன், நானும் தமிழன்! பிரமாதம்டா!!

நானொன்னும் அழுதுட்டு கிடக்கல, தூங்குனேன். காலைல போஸ்ட் ஆபிஸ் போனேன், EBல போய் மீட்டர் ரண்டு மடங்கு சுத்துதுன்னு கம்ப்ளய்ண்டு குடுத்தேன். பசியடங்கறளவு சாப்புட்டேன். என்ன குறைச்சல்? இப்போ மத்தியானம் ப்ளாக்க தொறந்து பார்த்தா, மத்தவங்க டெய்லி எழுத்றாங்க, நாம வாரத்துல ஒன்னாவது எழுதலயேன்னு ஒரு சுய பச்சாதாபம்! இனையத்தொடர்ப பயன்படுத்தி ஆன்லைன்ல சம்பாதிக்கறதுக்கு 3 வாரமா பல விதமா பல்டியடுச்சுட்டிருக்கறேன், ஒன்னும் நடக்கல! இங்கிலீஷு ப்ளாக் ஒன்ன ஆரம்பிச்சு, புடிக்காத பொண்டாட்டிய திருவிழாவுல தொலச்சவன் கணக்கா அந்த ப்ளாக் பக்கம் போகாமலேயே திரியறேன்.

அதுதான் பாத்தேன், இது ஒன்னும் வேலைக்காது! கிளம்பிருலாம்னு ஒரு தீர்மானம்! ஆமா, பின்னென்ன? தமிழ்மணத்துல இணைச்சாசு, தமிழ்10லயும் சேத்தியாச்சு, சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம்....ம்ஹும்! ஒன்னு நடக்கல! பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!!

(யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில், நான் இந்தப்பதிவை உள்ளிடவில்லை. இது முழுக்க முழுக்க என் தற்பொதைய மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே!)