Saturday, May 23, 2009

ஜெயமோகனின் "நிகழ்தல்" படித்தேன்.

இந்த புத்தகம் ஒரு சுயகுறிப்பேடு! எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய 1 வயதுக்கும் குறைவான நாட்களிலிருந்து தொடங்கி இப்போவரைக்கும் உள்ள விபரத்தை ஆங்காங்கே இடைவெளி விட்டு எழுதியுள்ளார்.

எனக்கு ஒரு தோழி மூலம் அறிமுகமான இவருடைய "ஏழாம் உலகம்" நாவலை படித்துவிட்டு கிறுகிறுத்து போனேன். அதற்கு முன்பு வரை சார்வாள் குறித்து நல்ல அபிப்ராயாம் ஏதும் இல்லை. கலைஞரையே எழுத்தாளர் கிடையாது என சொல்லுவதும். எம்.ஜி.ஆர், சிவாஜியை மானாவாரியாக கேலிசெய்வதுமான திடீர் புகழுக்கு ஆசைப்படும் பாமரன் என்றொரு எண்ணம்தான் இவரைப்பற்றி எனக்கு. அதிலும் பார்ட்டி இந்துத்வா சாய்மானம் உள்ளவர் எனக்கேள்விப்பட்டு அருவருப்பு தட்டிப் போய் ஜெயமோகன் என்பவரை கவணித்ததேயில்லை.

ஆனால் "ஏழாம் உலகம்" என்னை புரட்டிபோட்டது. சின்ன வயதில் பழனி மாதிரியான படிக்கட்டு கோவில்களுக்கு போகயில் அங்குள்ள ஊனமுற்ற பிச்சைக்காரர்களைக் குறித்து அந்த வயதில் எனக்கு வந்த லாஜிஸ்டிக் சந்தேகங்களை மேற்படி புத்தகத்தில் (என்னை) புரட்டி உருட்டி எடுத்து விளக்கியிருந்தார். கூடவே ஊனமுற்றவர்களின் லௌகீக உணர்வுகளின் படப்பிடிப்பு இருக்கே, சும்மா பின்னி பிசிரி எடுத்திருந்தார். எப்படி ஒரு மணிதனுக்கு இந்த களத்தை, இவ்வளவு விஸ்தாரமாக எழுதமுடிந்தது ? என்கிற கேள்வி நண்டு பிறாண்டிகொண்டேயிருந்தது!

சர்தான் வாத்யார்கிட்ட இனிமே கமால் பத்ரி ரய்டு! என சமாதானமாக கிடக்க வேண்டியதுதான் என்று தோன்றினாலும், ஆதியில் அவர் மேல் வந்த மறுப்புணர்வுக்கு ஆதாரமாக ஏதாவது பிட்டு பீஸூ சிக்காதா என அவ்வப்போது குப்பையை கிளறத் தோண்றும்.

இந்த "நிகழ்தல்" புத்தகத்தை, புத்தகக்கடையில் மேம்போக்காக மேய்ந்த போது ஆழமான சில வாக்கியங்கள் ஈர்த்தன, தவிர அடுத்தவன் வாழ்கையை எட்டிப்பார்ப்பதில் ஒரு ஆர்வம். அதிலும் குறிப்பாக இந்த மாதிரி வழக்கத்துக்கு மாறான ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசை வர, வாங்கி வந்தேன்.

மெர்சலாயிட்டேங்க! இதுதான் சரியான வார்த்தை பதிவு!

கடாமுடானு தன் அப்பாவ பற்றி சொல்லி அவர மெல்ல மெல்ல பாசமான அப்பாவா காட்டி, அப்பிடியே கிரேன் அப் பண்ணினவுடன் வைடு ஷாட்டில் அந்த அப்பா செம காரெக்டராகி, அழ விடுகிறார். செம எபிசோடு! இந்த புத்தகத்திலிருந்து வருங்கால் சந்த்தியினர் பல சீன்கள் உருவலாம். மகனே எவனும் அப்படி ஈஸியா உருவிடாதீங்க! அதெல்லாம் செய்யக்கூடிய ஆர்டிஸ்டுகள் எல்லாருமே செத்துப்போயிட்டாங்க!

இவரு என்னங்க பெரிய இவரு! ஜெயமோகனுங்க அம்மா ஒரு பயங்கரமான படிப்பாளிங்க! ஒரே ஒரு சந்தோஷம் என்னை மாதிரி கடைசிப்பிள்ளைகள் அம்மாவுடன் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அப்பாவை அதிகம் கவணிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். அது போலவே அண்ணன்கள் அப்பாவின் நீழ்ச்சியாக உருவாகிறார்கள் - கொஞ்சம் லைட்டா! மேற்படி சமாச்சாரங்கள் படித்தபோது ஒரு நோஸ்டோல்ஜியா சந்தோஷம்!

இந்த "நிகழ்தல் " புத்தகத்தின் பிரதான எபிசோடு தன் காதல் மனைவியுடன் அவர் நடத்தும் குடித்தனம் பற்றியது. உருகி சொல்லியிருக்கிறார். பிரமாதம்! ஆனால் என் வகையில் அந்த மாதிரியான காதல் சாத்தியமேயில்லை என நூறு கையெழுத்து உள்ளது. 99ஐ நானே போட்டு விட்டேன். மீதமுள்ள ஒன்று இடது கையால் போட்டேன். பெஸ்ட் எபிசோட் ஆப் தி புக் அதுதான்!

அதுபோலவே தன் மகன் அஜிதனோடு அவருக்குள்ள புரிதல், ஒரு குழந்தை வளர்கையில் அதன் தந்தையாக ஒரு பாசப் பார்வையும், ஒரு மூன்றாம் நபராக ஒரு விதமான விமர்சனமற்ற அப்சர்வேஷனுமாக. . . படிப்பவனை அவருடைய அனுபவங்களுக்கு இட்டுப்போகும் போது, எனக்கு அழுகை வந்தது தவிர்க்க முடியவில்லை.

பாதி புத்தகத்துக்கு மேல் ஒவ்வொரு தலைப்புக்கும் இடையே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்பே படிப்பது சாத்தியம்! நிகழ்வுகளையும் உணர்வுகளையும் அவ்வளவு அதிகமாக நெருக்கமாக வரிக்கு வரி பண்ணுகிறார்.

சரியான் வாலிபத்தில் அழகான பெண்களோடு நிகழ்ந்த என்கவுண்டர்களை கடக்கையில் வாய் வழியாக எட்டி குதித்த அசௌகரிய மனசாட்சியும், இவர் ரியேக்‌ஷனும். . . சர்தான்ங் வாத்யாரே எனும் ஒரு கிண்டல் வார்த்தை மனதோரத்தில் வந்து அமுங்கி போய்விடுகிறது! காரணம் இந்த மாதிரி லூசு ஆசாமிகள் நல்ல ஃபிகர்களை தவிர விடுவதில் ஆச்சர்யமில்லை!

யூனியன், லால் சலாம், காம்ரேடு என கேரள தொழிற்சங்க சூழல் தொடங்கி, ஷிப்டு முடிந்து தளர்ந்து போய் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிப்போகும் விபச்சார அழகிகளோடு இரயிலிலும் வாழ்கையிலும் உடன் பயணிப்பது யாருக்கும் இயன்றதுதான். அது ஜெயமோகன் மாதிரியான் எழுத்தாளருக்கு அமையப்போய் ஊருணி நீர் இறைக்கிறார், நிறைகிறது!

தன் இன்றைய வாழ்கையை காந்திய சிந்தனைகள் (அ) வாழ்முறையைக்கொண்டு மெல்லிய நூல் மாதிரி வைத்துகட்டிகொள்கிறார். எனக்கு படிச்சமுட்டுக்கு இவரு ஒரு தலைமறைவான நக்ஸ்லைட்டு மாதிரிதாங்க தோனறாரு! பூதம் எப்போ கிளம்புமோ?

ரொம்ப நல்ல புக்குங்க! பிரமாதமா இருக்கு! மனுசனா பொறந்தா ஒரு வாட்டி படிக்கனும்!
ஆனாலும் இவர ஒரு நாள் நான் கவுக்கணும்! பாப்போம்!!

சர்வம் - பார்த்தேன்


ஒரு முறை ஒளிப்பதிவளர் ரவி கே. சந்திரனோடு பேசிக்கொண்டிருக்கையில் "ஒரு படத்தை விமர்சிக்கும்போது யாராவது "இந்த படத்தில் கேமரா சூப்பர் என்று சொன்னால் அதில் கேமராமேன் தவறாக அல்லது அந்த சினிமா கதைக்கு பொருத்தமில்லாமல் வேலை பார்த்திருக்கிறார் என்பதாய் கொள்ள வேண்டும் என்றார்.

முதல் காட்சியில் ஜே.டி.சக்கரவர்த்தி இரண்டு கல்லறைகளுக்கு பாக் செய்யப்பட்ட சாண்ட்விச்களை படையல் மாதிரி வைத்துவிட்டு, அவரும் ஒரு சாண்ட்விச்சை சாப்பிடுகிறார், அது ஒரு மந்திர சாண்ட்விச். அதாவது அவர் சாப்பிட சாப்பிட வளர்ந்து கொண்டேயுள்ளது. ஒரு ஷாட்டில் அவர் கடித்ததால் பாதிக்கும் குறைவாய் போன சாண்ட்விச், மறு ஷாட்டில் முக்கால்வாசியாய் வளர்ந்துவிடுகிறது. ஆஹா.... விஷ்னுவர்த்தன் இந்தப் படத்தில் ஜல்லியடித்துவிட்டாரோ என அங்கேயே தோன்றிவிடுகிறது.

அந்த கல்லறை & சாண்ட்விச் ஷாட்டின் இன்னொரு கோளாறு, அவருடன் உள்ள ஒரு மகா நாய். மேற்படி கல்லறை யாருடையது? என்ன விபரம்? என பார்வையாளர்களுக்கு டைரக்டர் தகவல் தருவதற்க்கு முன், அதை கடந்து போகும் ஒருவன் வெற்றிலை எச்சிலைஅந்த கல்லறையின் மீது துப்பிவிட்டு போகிறான். நாய் அதை பார்த்ததாய் தெரியவில்லை. அது புஷ் புஷ்ஷென மூச்சுவிட்டபடி நின்றுகொண்டிருக்கிறது. ஜே.டி ஒரு காகிதத்தை எடுத்து அந்த எச்சில் கறையை துடைத்து விட்டு, அந்த மந்திர பன்னை... சாரி, சாண்ட்விச்சை தின்றபடியே கல்லறையை பார்த்து பாதிக்கு மேல் வசனம் பேசும் வரை, நாய் அங்கேதான் பக்கத்தில்தான் நிற்கிறது. வசனம் முடிந்து பார்த்தால் நாயை காணோம்! ஜே.டி நாயை தேடுகிறார். அது ஒரு கல்லறை மறைவிலிருந்து பயங்கர பின்னணி இசை சகிதம் வருகிறது. அங்கே எச்சில் துப்பியவன் கழுத்து ரணப்பாட்டு ரத்தம் வடிய கிடக்கிறான்! ஜே.டி. நாயின் வாயிலுள்ள் ரத்தத்தை துடைக்கிறார். அந்த நாய் சுஜாதா கதையில் வரும் ஜீனோ ரேஞ்சில் யோசிக்கிறது. அப்பேர்க்கெத்த அந்த மகாநாய் படத்தின் பின்பகுதியில் அநியாய வேஸ்ட்! புஷ் புஷ் என்று ஓடியபடியே உள்ளது. அம்மாம்பெரிய நாயை விஷத்தால் பாதிக்கப்பட்டு, ஏழு மலை ஏழு கடல் தாண்டி,, ஓடி ஒடி ஓடி மூச்சு வாங்கி, கண்கள் இருண்டு போன ஆர்யா லொடக் என்று கொன்றுபோடுகிறார். அடேயப்பா படம் அநியாயத்துக்கு எதார்த்தம்.

படத்தில் இரண்டு தாடிகள். ஒன்று உதயம் படத்தில் ஒல்லியாக தாடியுடன் அறிமுகமாகி தெலுங்கு, ஹிந்தியெல்லாம் நடித்து மார்க்கெட்டில் நிலைத்த்தால் கொஞ்சம் உடம்பு போட்டுவிட்ட பூர்வீக தாடியாளர் ஜே.டி.சக்கரவர்த்தி, மற்றொன்று காதலி செத்துப்போனவுடன் இண்டர்வெலுக்கு பிறகு ஆர்யா வைத்துக்கொள்ளும் பெரிய தாடி. அரையிருட்டு சண்டை காட்சிகளில் எந்த் தாடி யாரை அடிக்கிறார் என்று ஒரு ம_ _ம் புரிவதில்லை. யாருங்க அது ஸ்டண்ட் மாஸ்டர்?

படத்தில் முதல் பாதியில் யாரவது ஒருவர் மயங்கி விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். முதலாமவர் கதாநாயகனின் நண்பர் - அவர் அப்படி அடிக்கடி விழுவது டமாஷாம். இரண்டாவது, ஆஸ்பத்திரியில் குழந்தைகள் வார்டில் டொபகென மயக்கம் போட்டு விழும் ஒரு குட்டிப்பெண் - அது படு டமாஷாய் போகும் காட்சியை முடிப்பதற்காக இயக்குனர் கொடுக்கும் அதிர்ச்சி(டிஸ்கஷ்னில் மேற்படி ஐடியாவை கொடுத்த அஸிஸ்டென்ட்டை கவணியுங்கள் – பிற்ப்பாடு பெரிய சீரியல் டைரக்டராய் வருவதற்க்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது). மூன்றாவது நபர், படத்தின் முக்கியமான கதாபாத்திரமான பொடியன். அவனுக்குத்தான் எத்தனை வேதனை? அம்மா கிடையாது, அப்பாவை அவ்வப்போது ஒரு வில்லன், மிரட்டுவது மாதிரி, பயமுறுத்துவது மாதிரி, பைத்தியம் மாதிரி, ஒரு மாதிரியாய் பேசிவிட்டு போக, அப்பா வேலையை மாற்றுகிறார், வீட்டை மாற்றுகிறார்!. பையன்தான் என்ன செய்வான்? அவனும் டொபகடீர் என மயக்கமாகி விழுகிறான். அப்புறம்தான் ஒரு ஒன்னாங்கிளாஸ் இன்டர்வெல்! அதற்குப்ப்பிறகு ஆர்யாவும் ஒரு முறை மயங்கி விழுகிறார்...அது சஸ்பென்ஸ்!

ஒரு பிரபலமான உலகப்படத்தில் வரும் நாய் ஜாடையில் இங்கே ஒரு லோக்கல் கிடைக்குமா என்று எப்பவோ சொல்லி வைத்திருப்பார்கள் போலும். கிடைத்தது..... சிந்தித்து விட்டார்கள்!. மேற்படி நாயை பயன்படுத்த எப்படியும் புளுகிராஸ் அனுமதி வாங்கவேண்டும், கூடவே ஒரு பாம்புக்கும் வாங்கி விடுவோம். அட்டே புளுகிராஸில் பாம்புக்கு அனுமதி வாங்கினதுதான் வாங்கினோம் அதை சேசிங் காட்சியில் சம்பந்தமில்லாமல் திடீரென காட்டினால் சூப்பர் திரில் கிடைக்குமே என ரூம் போட்டு கடுமையாய் யோசித்திருக்கிறார்கள்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், படத்தில் விஷ்னுவர்த்தன் சிம்பு படத்தை கிண்டல் அடித்திருப்பது.

படத்தில் இசையமைப்பாளர் யுவன், அவர் வேலையை அவர் அழகாக செய்துள்ளார். ஒரு சந்தேகம், கதாநாயகி வரும்போதெல்லாம் நாயகனுக்கு புல்லரிக்கிறது, காது நிறைய குறிப்பிட்ட ஒரு இசை கேட்கிறது. பட்டையை கழட்டும் ஒரு தீம் மியுசிக் போட லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. அதை சூப்பராக கோட்டை விட்டு விட்டு எங்களுக்கு இளையராஜா ம்யுசிக் போட்டு காட்டிய இயக்குனர், அதற்கு ஒத்துக்கொண்ட இசையமைப்பாளர், இரண்டு பேருக்கும் ஒரு தகவல்...... இளையராஜா பற்றி நீங்கள்ளாம் சொல்லி தெரிஞ்சுக்கற நிலையில நாடு இல்ல!

சர்வம் படத்தை திரிஷா மாமிக்காக பாக்கலாம் என ஒரு இணைய விமர்சனம் பார்த்து விட்டு எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் போனேன். ஆனால் திரிஷா ஜீரோ ஸைஸ் முயற்சிப்பது மாதிரி தெரிகிறது! ரொம்ப பலவீனமாக உள்ளார்! இன்டர்வெலோடு செத்துப்போவதற்க்கு இவ்வளவு நடித்தால் போதும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல!

சர்வம் படத்தில் நிரவ்ஷா கேமரா சூப்பர்!!

வேறுபாடுகள்

பகல் முழுக்க
நின்ற களைப்பில்
விளக்கணைத்தவுடன்
தூங்கிப் போகுமா
படுகையறை
சுவரும் கதவும்!!

தண்ணீர் இறைவதை
அலுத்துக்கொள்ளுமா
குளியலரைக்
கூரை ஓடுகள்!!

தேய்ந்த
சக்கரங்கள் சொல்லுமா
பழைய
சுற்றுலா கதைகள்!!

பல்லுக்கும் வருமோ
ஜீரண அஜீரனங்கள்!

இருப்பு என்பது
இருப்பா, வாழ்தலா?

சரிதான்
காகிதங்களுக்கு
கிறுக்கலென்ன
கவிதையென்ன!!

Friday, May 22, 2009

இந்த வார குமுதமும் விகடனும்

வியாழக்கிழமைகளில் காலை ஏழு மணிக்கு படுக்கையில் இருந்தாலும் கூட "அட இன்னிக்கு விகடனும் குமுதமும் வருமே" என எதிர்பார்ப்புகளோடு எழுவேன்.

இந்த வாரம் கூட அப்படியே, எனினும் காலையிலேயே ஒரு அவசர சோலியாக வெளியே போய் மாலைதான் வந்தேன். பகல் முழுக்க வேலை மும்முரம் புத்தககங்கள் மறந்து போனது.

சாயங்காலம் வந்தவுடன் மேசையில் கிடந்த புத்தகங்களை உள்ளக்கிளர்வோடு எடுத்துப்புரட்ட புலித்தலைவர் பிரபாகரன் மரணத்திற்கு பிறகான ஈழத்தமிழர் நிலை குறித்த பல்வேறு கேள்விகள் உள்ளமைந்த கட்டுரைகள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இரண்டு பத்திரிக்கையும் பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்துகின்றன! மற்றபடி இரண்டு புத்தகங்களிலும் எண்ணற்ற வாழ்கைக்கு தேவையான சினிமா செய்திகள் உள்ளன. ஆனால் அவையெல்லாமே இந்த ஈழ செய்திகளுக்கு மத்தியில் பார்க்கையில், ஏதோ இழவு வீட்டில் அதன் தீவிரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் சின்ன குழந்தைகள் மாதிரித்தான் உள்ளது.

தலைவர் பிரமபாகரன் மரணசெய்தியை மறுத்து பதிலுக்கு பல தமிழ் இணையதளங்கள் மற்றும் நக்கீரன் இதழ் தலைவர் பிரபாகரன் எப்படி சிங்கள படையிடமிருந்து தப்பிப் போனார் என்று விவரமாக படமெல்லாம் போட்டு சொல்கின்றன.

இப்படி தகவல்கள் ஆசுவாசப்படுத்தினாலும், இப்போ இலங்கையில் நம் தமிழினம் கடும் சிரமத்தில்தானே உள்ளது என யோசிக்கையில் மற்ற மாநிலக்காரர்கள் முன்னால் ஏதோ கேவலப்பட்டு நிற்பது போல் தோன்றுகிறது. என் பிற மொழி பேசும் நண்பர்களிடம் இது தொடர்பான கேள்விகளுக்கு என்ண சொல்வது என்ற்ந்ந் தெரியவில்லை. பள்ளிகூடத்தில் படிக்கையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உத்தரவால் அமைக்கப்பட்ட த்மிழீழ போராட்டகாரகளுக்கு அமைக்கப்பட்ட பயிற்சி முகாமில் ஒன்று எங்கள் ஊர் அருகே உள்ளதாக பேசிக்கொள்வார்கள். அதன் வழியாக இலங்கைக்கு போயிருக்கலாமே என ஏக்கம் வருகிறது. முயன்றிருந்தால் முடிந்திருக்குமா என்பதை அறியேன்.

இன்றைய ஈழம் குறித்து எனக்கே இப்படி ஒரு மனநிலை இருக்கிறதே, டெல்லி போகிற நம் தமிழ் நாட்டு தலைவர்களுக்கெல்லாம் அது மாதிரி கையாலாதனத்தின் வெட்கம் கொஞ்சமாவது தோணாதா???

Tuesday, May 19, 2009

இன்று இரண்டாயிரத்து ஒன்பதாம் வருஷம் மே மாதம், பத்தொம்பதாம் நாள்

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணத்தை இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. சற்று முன் வரை இருந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது. இணையத்திலும், டிவி சேனல்களிலும் மாற்றி மாற்றி தேடுகிறேன், யாராவது "அப்படியெல்லாம் இல்லை, பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக உள்ளார்" என்று சொல்லமாட்டார்களா என இப்போவரை தேடிக்கொண்டுள்ளேன்.

என் நினைவில் ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்திஆறாம் வருஷம் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக பந்த, ஊர்வலம், அகதிகளுக்கு பழைய ஆடைகள் சேகரித்து கொடுத்தது, எங்கள் பக்கத்து கடையில் ஒரு அகதி சிறுவன் வேலை பார்த்து, குசினி, கதைப்பது என்பது மாதிரியான ஈழத்தமிழ் சொல்லிக்கொடுத்தவன், அரசாங்கம் அகதிகளை திரும்ப அனுப்பிய போது "போயிட்டு வாறன் அண்ணா" என்று ஒரு நாள் திடீரென போனதும், மனசு முழுக்க ஈழம் என்றால் சிங்களர்களின் அடக்குமுறை, சிலோன் ஜெயிலில் குட்டிமணி ஜெகன் கொல்லப்பட்டது தொடங்கி முந்தாநாள் வரை தமிழர்கள் கும்பல் கும்பலாக கொலையாகிப்ப்போனது வரை ஈழத்தமிழர்களுக்கான எண்ணம் வரும்போதெல்லாம் புலிகள் உள்ளார்கள், தமிழ் ஈழம் ஒரு நாள் நிச்சயம் மலரும் என தீர்மானமாக நம்பினேன்.

புலிகளின் அரசியல் குறித்து எனக்கு சில மாற்று கருத்துக்கள் இருந்தாலும், இன்றைக்கு விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டவுடன், அட கொடுமையே, இனி நம் தமிழர்கள் அங்கே இலங்கையில் இனி அடிமைகளாக மட்டுமே வாழ்வார்களோ! என வருத்தம் கலந்த சந்தேகம் வருகிறது. இணையத்தில் பல விவாதங்களை படிக்கிறேன், யாராவது சொல்லுங்கள், இனி நம் மக்கள் அங்கே நலமாக, சம உரிமையுடன் வாழ முடியுமா? உலகெங்கும் புலம் பெயர்ந்துள்ள நம் தமிழ்ர்கள் நாடு திரும்புவார்களா? தப்பி உயிர் பிழைத்த புலிகளின் நிலை இனி என்ன?

இதையெல்லாம் மீறி டிவியில் காட்டப்படும் காட்சிகளில் அடையாளம் காட்டுவதற்காக அந்த மாவிரனின் உடலை தொட்டு பார்க்கும் சிங்கள விரல்கள், தரையில் படிந்து சாயும் தலை. முன்நெற்றியில் உள்ள காயம், ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க!

நிசமா போர் முடிஞ்சிருச்சா?